நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது- வர்த்தக வலய தொழிலாளர்கள்

0
135

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது தமது வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளதாகவும் தமது பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவைக்கூட வழங்க முடியாத நிலைமைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் வர்த்தக வலயத் தொழிலாளர்களுக்கான தேசிய மையத்தின் உறுப்பினர் தம்மிகா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பெண்கள் என்ற முறையில் தாய் என்ற முறையில், கடந்த காலங்களில் நாம் பணிப்புரிந்த நிறுவனங்களில் வழங்கப்பட்ட ஊதியதத்தைக் கொண்டு எமது பிள்ளைகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க முடிந்தது.

எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசௌகரியாமான சூழ்நிலை காரணமாக மூன்று வேளை உட்கொண்ட எமக்கு இரண்டு அல்லது ஒருவேளையே உணவு உட்கொள்ள நேரிட்டுள்ளது.

மிகவும் துர்ப்பாக்கியமான நிலைமையை எதிர்கொண்டு வருகின்றோம்.

74 வருடங்களாக ஆட்சியாளர்கள் முன்னெடுத்த தவறான நெறிமுறைகள் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு நாங்களா காரணவாதிகள் என்றே அரசாங்கத்தை கேட்கத் தோன்றுகின்றது.

கடந்த வருடம் கொரோனா எனும் பெருந்தொற்றுப் பரவலால் உயிர்பயத்தை எதிர்கொண்டு இருந்தோம்.

அவ்வாறான சூழலிலும்கூடு நாட்டுக்கு டொலரை கொண்டுவருவதற்காக எமது உயிரையும் பணயம் வைத்து பணியாற்றிவர்களே நாங்கள்.

நாடு கொரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு முகங்கொடுத்திருந்தபோது பல துறைகளைச் சேர்ந்தவர்கள் சேவைக்கு சமூகமளிக்கவில்லை. பல தொழிற் நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. எனினும் அத்தியாவசிய சேவையாளர்கள் என்ற முறையில் அரச, தனியார் நிறுவனங்களுக்கு நாம் பணியாற்றுவதற்காக வந்தோம்.

பாரிய சவாலுக்கு மத்தியில் பணிக்கு வந்த நாம் நாட்டுக்கு டொலரை கொண்டுவந்தோம். எனினும் அந்த டொலரினால் எம்மால் தற்போது வாழமுடிகின்றதா, அந்த டொலருக்கு சமமான சம்பளம் தற்போது கிடைக்கின்றதா?

எமது பிள்ளைகளுக்கு போசணை மிக்க உணவை மூன்று வேளைகளும் வழங்க முடிகின்றதா?

எரிவாயு இல்லை. மின்வெட்டும் அமுல்படுத்தப்படுகின்றது. அதேபோன்று நாம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இருக்கின்றோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், விறகு இல்லாமல், எரிவாயு இல்லாமல், மின்சாரம் இல்லாமல் எவ்வாறு நாம் வாழ்வது?