நாடு எதிர்நோக்கும் எந்தவொரு சவாலையும் முறியடிக்கக் கூடிய திறமையான அணி தன்னிடம் இருப்பதாகவும், அரசாங்க நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்குவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற இலங்கை தொழில் நிபுணர்களின் அமைப்பின் 37 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் விரைவான பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதே எமது இலக்கு. நிலையான பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்துடனான நமது ஒப்பந்தத்திற்கு இணங்குவது மிகவும் முக்கியமானது. அந்த உடன்பாட்டை எட்டுவது எளிதல்ல. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பல்வேறு கடன் வழங்கும் குழுக்கள் உட்பட பல தரப்பினருடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
அவற்றில் பெரிஸ் கழக நாடுகளும் இருந்தன. சீனா வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருந்தது. எனவே இந்த சிக்கலான சூழ்நிலையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. மேலும் எமில்டன் ரிசர்வ் வங்கியால் எங்களுக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இன்னும் தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
சவால்கள் இருந்தபோதிலும், நாங்கள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகள் நெருக்கடியிலிருந்து எங்களை வெளியே கொண்டு வந்து, மக்களுக்கு வளர்ச்சி மற்றும் நிவாரணம் தொடர்பிலான நம்பிக்கையை அளித்துள்ளது.
நாம் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக மாற வேண்டியது அவசியம். அதற்காவே பொருளாதார மாற்றச் சட்டம் , பொது நிதிச் சட்டம், மத்திய வங்கிச் சட்டம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டம், அரச கடன் முகாமைத்துவச் சட்டம் போன்ற பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, முதன்முறையாக ஒரு கொள்கையை சட்டமாக ஆக்கியுள்ளோம். அவ்வாறிருக்க, தலைமை மாற்றம் அல்லது ஆட்சி மாற்றத்தினால் அதனை இலகுவாக மாற்ற முடியாது.
நாம் இப்போது போட்டித்தன்மை மிக்க ஏற்றுமதி பொருளாதாரமாக மாறுவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு, ஆடை கைத்தொழில் போன்ற துறைகளில் அதிக உற்பத்தித் திறன் தேவைப்படுகிறது. அவற்றை கொண்டு உயர்தரச் சந்தைகளுக்குள் பிரவேசிக்க வேண்டும். மேலும், உலக அளவில் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பயன்படுத்தி விவசாயத்தை நவீனமயமாக்க வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம், அதன் மூலம் ஒரு இரவுக்கான வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, சுற்றுலா மற்றொரு முக்கிய துறையாக மாறுகிறது. விநியோகச் சங்கிலிகளை விரிவுபடுத்துதல், உயர்-தொழில்நுட்ப தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஆரம்ப பிரவேசம் ஆகியவையும் முக்கியமானவை.
அதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி நான்கு புதிய பல்கலைக்கழகங்களை நிறுவ இருக்கிறோம்.