தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் சிறிது சிறிதாக நிறைவேற்றப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் திவுலப்பிட்டிய தொகுதியின் பிரதான அமைப்பாளர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் ஒன்றாக 22ஆவது திருத்தம் உள்ளடங்கியுள்ளது. இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டதனூடாக பாரிய வெற்றி ஈட்டப்பட்டுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல், அதேபோன்று இரட்டை பிராஜவுரிமையுடைய நபர்களுக்கு பாராளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை போன்ற பல்வேறு நல்லவிடயங்கள் இந்த 22ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் அதிகமாகக் காணப்படுவதாக ஒவ்வொரு பிரசாரக் கூட்டங்களிலும் நாம் எடுத்துரைத்தோம்.
ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகக் கூறி 1994ஆம் ஆண்டிலிருந்து ஆட்சிக்கு வந்த சகல ஜனாதிபதிகளும் அதனை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை.
அதேபோன்று ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுவரை ஜனாதிபதி பதவிக்கு சகலரும் தமக்கான அதிகாரங்களை அதிகரிப்பதற்கே பார்த்தனர்.
20ஆவது திருத்ததில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கான அதிகாரங்களை அதிகரித்துக்கொண்டார்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியானதன் பின்னர் தனக்கான அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுவரை ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகள் செய்யாத ஒருவிடயத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்துள்ளார்.