நாட்டு மக்கள் வெறுப்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ளவில்லை

0
235

நாட்டு மக்கள் வெறுக்கின்றார்கள் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னமும் விளங்கிக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண, அரசாங்கத்திலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 41 பேரும், ஒரு குழுவாக
அமர்வதற்கு சபாநாயகரிடம் கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து விலகிய 11 பங்காளி கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற
சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தையும், அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் ஏன்
ஒன்றிணைந்து வெறுக்கிறார்கள் என்பதை ஜனாதிபதி இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை.
மக்களின் வெறுப்பை பெற்றுக்கொண்டு ஆட்சியதிகாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது என்பதற்கு
இலங்கை அரசியல் வரலாற்றில் பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து குறுகிய கால கொள்கை அடிப்படையில் செயற்படுவது அவசியமானதுடன், வெகுவிரைவில் பொதுத்தேர்தலை நடத்தி மக்களின் அபிலாசைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினோம்.
புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை. மக்களினால் வெறுக்கப்படும் அமைச்சரவையினையே மீண்டும் நியமிக்க அவர் அதிக அவதானம் செலுத்தியுள்ளார்.
கொள்கைக்கு முரணாக ஆட்சியாளர்கள் செயற்பட்டதன் காரணத்தினால் அரசாங்கத்திலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.
நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 41 பேர் ஒரு குழுவாக நாடாளுமன்றில் அமர்வதற்கு ஆசனம் ஒதுக்கி தருமாறு
சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்.
நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் சூழலை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் வலியுறுத்தவுள்ளோம்.
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண் அரசாங்கம் நடைமுறைக்கு பொருந்தும் வகையில் எவ்வித திட்டங்களையும் செயற்படுத்தவில்லை. பிரச்சினைகளுடன் வாழ்வதற்கு மக்கள் தங்களை பழக்கப்படுத்திக்கொண்டுள்ளார்கள்’ எனத் தெரிவித்தார்.