நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0
5

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ​​சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷ மற்றும் பலர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிந்துவிட்டதோடு விபரங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் ஆலோசனைகள் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்படி வழக்கை ஓகஸ்ட் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான் அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை NR CONSULTANCY என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, நிறுவனத்தின் பணிப்பாளர்களாக பணியாற்றிய நித்யா சேனானி சமரநாயக்க, சுஜானி போகல்லாகம மற்றும் சுதர்ஷன கனேகொட ஆகியோருக்கு எதிராக, முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது நீதிமன்றத்தில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.