25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நினைவேந்தல் உரிமையும் சட்டரீதியான போராட்டமும்

மாவீரர் தின நினைவேந்தலைத் தடுக்க கொரோனா வைரஸ் தடுப்புச் சட்ட நெறிமுறைகள் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் கூறியிருக்கின்றது. இது ஓர் அபத்தமான முயற்சி. இறந்தவர்களை நினைவேந்துவது ஓர் அடிப்படை உரிமை சார்ந்த விடயமாகும். இதில்  கொரோனா தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த ஓர் அரசு முற்பட்டிருப்பதன் மூலம் அதன் இயலாத் தன்மையும், அதன் இனவாதப் போக்கும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பயங்கரமாக உருவெடுத்துள்ளது. சுகாதாரம் சார்ந்த இந்த விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாள வேண்டியது அரசாங்கத்தின் கடமையும், பொறுப்புமாகும். அதேவேளை, அந்த வைரஸ் தொற்றிப் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும், உரிய தடை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதும் நாட்டு மக்கள் அனைவரினதும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும்.

ஏனெனில், கொரோனா வைரஸ் வகைதொகையின்றி மனித உயிர்களைக் குடித்து, ஏப்பமிட்டு வருகின்றது. இது முகம் தெரியாத ஒரு நவீன அசுரனாகும். அந்த அசுரனை ஒதுக்கித் தள்ளவும், ஒழித்துக்கட்டவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம். இந்த மனிதாபிமான பொறுப்பை சாமான்ய மனிதர்கள் – சாமான்ய மக்கள் தெளிவாகப் புரிந்திருக்கின்றார்கள். அந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் அவர்களை சட்ட ரீதியான ஏற்பாடுகளின் மூலம் அரசாங்கம் வழிநடத்த வேண்டும். அதன் வழிநடக்க மறுப்பவர்கள் அல்லது தவறுபவர்களைக் கண்டித்தும், தண்டித்தும் வழிநடத்திச் செல்ல வேண்டியதே நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஆனால், இந்த சட்டரீதியான ஏற்பாடுகளை ஓர் இனத்துவ உரிமை சார்ந்த விடயத்தில் பயன்படுத்துவோம் என்று அரசு அச்சுறுத்தி உள்ளது. இந்த அச்சுறுத்தலும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதும் ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல.

ஓர் ஆயுத முரண்பாடு அல்லது யுத்தம் என்பது இரு தரப்பு சார்ந்த விடயமாகும். அதன் முடிவில் ஒரு தரப்புத்தான் வெற்றியடைய முடியும். ஆனால் அந்த வெற்றியானது, தோல்வியைத் தழுவிய தரப்பின் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும். யுத்தத்தில் எதிரி சாமான்யனாக இருந்தால், அந்த வெற்றி மலிவான வெற்றியாகவே கருதப்பட வேண்டும். பலம் மிகுந்த எதிரியை வெற்றி கொள்வதே வெற்றியின் இலட்சணம்.

அந்த வகையில் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்ட அரசாங்கம், விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையையும், யுத்த வல்லமையையும் வெளிப்படுத்தினாலன்றி அதனுடைய வெற்றி ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்பட முடியாது. அதேவேளை, அந்த யுத்தத்தில் மரணித்த அரச படையினரைப் போன்று உயிரிழந்த விடுதலைப்புலிகளையும் வீரர்களாகவும் வீரம் செறிந்தவர்களாகவும் அரசு மதிப்புயர்த்த வேண்டும்.  எல்லாளன் – துட்டகைமுனு யுத்தத்தில் எல்லாளனுக்கு அளிக்கப்பட்ட மரியாதையைப் போன்று அது அமைய வேண்டும்.

எதிரியையும், எதிரியின் பராக்கிரமத்தையும் மதிப்பதன் மூலமே அரசாங்கத்தின் யுத்த வெற்றி பேசுபொருளாக இருக்க முடியும். யுத்தத்தில் மரணித்த படையினரைப் போற்றி, எதிர்த்தரப்பினராகிய விடுதலைப்புலிகளைத் தூற்றுவது அல்லது தூஷிப்பதென்பது அந்த வெற்றியின் சிறுமைத்தன்மையை அடையாளப்படுத்துவதாகவே அமையும்.

வெற்றி, தோல்வி என்பதற்கு அப்பால், நாட்டின் ஒருமைப்பாட்டை மூச்சிலும், பேச்சிலும்  வலியுறுத்துகின்ற அரச தரப்பினர் யுத்தத்தின் பின்னர், யுத்தத்திற்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முயற்சித்திருக்க வேண்டும்.

ஆயுதங்களைப் பயன்படுத்தி அளவற்ற அடக்குமுறைகளின் மூலம் விடுதலைப்புலிகளையும் விடுதலைப்புலிகளைச் சார்ந்த தமிழ் மக்களையும் தோற்கடித்ததன் மூலம் மாத்திரம் அரசு தனது வெற்றியை அளவீடு செய்யக் கூடாது. அது தவறானது.

வெற்றி என்பது ஆயுதமுனையில் இராணுவ ரீதியாக அடைந்ததுடன் முற்றுப் பெறுவதில்லை. யுத்தத்தின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்புக்களிடையே பொது இணக்கப்பாட்டையும், நல்லுறவையும், ஐக்கியத்தையும் வளர்த்தெடுப்பதிலேயே அந்த யுத்த வெற்றி முழுமையடைய முடியும்.

ஆனால், ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் அத்தகைய முழுமையை நோக்கிப் பயணிப்பதாகத் தெரியவில்லை. யுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னர், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றும் நாடு பிளவுபட்டுக் கிடந்தது. இரண்டு பிரதேசங்களிலும் ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள் தமது இலக்காகிய தனிநாட்டுக் கோரிக்கையின் அடிப்படையில் தனிநாட்டுக்குரிய நிர்வாகச் செயற்பாடுகளுடன் ஆட்சி நடத்தினர்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் ராஜபக்சாக்களினால் பூகோள ரீதியாக நாட்டை இணைக்க முடிந்தது. ஒரு நாடாக்க முடிந்தது. ஆனால் பல்லின மக்களைக் கொண்ட மக்களை உளவியல் ரீதியாக ஒன்றிணைக்க முடியவில்லை. யுத்த காலத்தைப் போலவே மக்கள் இன்னும் இன ரீதியாகப் பிளவுண்டு கிடக்கின்றார்கள்.

இனப்பிரச்சினையின் காரணமாக இன ரீதியாக அரசியல் நோக்கங்களுக்காகப் பிளவுபடுத்தப்பட்ட இலங்கை மக்கள் யுத்தத்தின் பின்னர் யுத்தத்தில் மடிந்தவர்களை பிளவுபட்ட ரீதியிலேயே நினைவுகூர்கின்றார்கள். உயிரிழந்த இராணுவத்தினர் அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வீரர்களாகப் போற்றப்படுகின்றார்கள். அதேவேளை அதே யுத்தத்தில் உயிரிழந்த விடுதலைப்புலிகளையும், அவர்களுடன் மடிந்துபோன பொதுமக்களையும் தமது எதிரிகளாக நோக்குவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான மனமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை சிங்களப் பேரின அரசியல்வாதிகள் தமது சுய அரசியல் இலாபத்திற்காகச் செய்துள்ளார்கள்.

இத்தகைய போக்கின் வழியிலேயே மாவீரர் தினத்தன்று நினைவேந்தல் செய்யக் கூடாது என்று அரசாங்கம் கூறியிருக்கின்றது. உத்தரவை மீறிச் செயற்பட்டால், கொரோனா தடுப்புச் சட்டம் அவர்கள் மீது பாயும் என்று இராணுவத் தளபதியும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமாகிய லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

ரணில் – மைத்திரி தலைமையிலான கூட்டாட்சி இடம்பெற்ற 2015ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில், இத்தகைய நினைவேந்தல்களை அரசு கண்டும் காணாத போக்கைக் கடைப்பிடித்திருந்தது. ஆனால் மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ள ராஜபக்சாக்களின் ஆட்சியில் மாவீரர் தினத்தில் நினைவேந்தல் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தையோ அல்லது கொரோனா வைரஸ் தடுப்புச் சட்டவிதிகளின் கீழேயோ நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கக்கூடாது. அத்தகைய தடைக்கு எதிராகத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோருவதே இந்த வழக்கின் முக்கிய நோக்கம். இதுபோன்று பல வழக்குகளைப் பல்வேறு இடங்களிலும் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் மாவட்டம் தோறும் அல்லது இராணுவத்தினர் தாங்கள் நினைத்த இடங்களில் எல்லாம் நீதிமன்ற உத்தரவைப் பெற்று கடைசி நேரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்கின்ற போக்கிற்கு சவால் விடுக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தரணிகளை உள்ளடக்கிய அமைப்பே இந்த வழக்குத் தாக்கல் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது.

தமிழர் தம் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களில் சட்டரீதியான போராட்ட களம் ஒன்று இதன் மூலம் திறக்கப்பட்டிருப்பதாகக் கருத முடியும். இதுகால வரையிலும் சட்ட ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதில் தமிழ்த்தரப்பினர் ஆர்வம் காட்டியிருக்கவில்லை.

இந்த நிலையில், அரசினதும், இராணுவத்தினதும் தடை உத்தரவை மீறி மாவீரர் வாரத்தைக் கடைப்பிடித்து, மாவீரர் தினத்தை அனுட்டிப்பதற்குத் தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணந்து முடிவெடுத்திருக்கின்றன. இந்த முயற்சி தமிழ் மக்களுடைய உரிமைகளுக்கான போராட்ட நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள முக்கிய திருப்பம் என்றே கூற வேண்டும்.

நாடாளுமன்ற அரசியலில் அதிக நாட்டமும், அந்தத் தளத்தில் குரல் எழுப்புவதையே தமது பிரதான போராட்ட களமாகத் தமிழ் அரசியல்வாதிகள் கொண்டிருந்தார்கள். ரணில் – மைத்திரி கூட்டு இணைவின் மூலம் 2015 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சக்கள் தனிச் சிங்கள வாக்குகளை ஆதாரமாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னணியிலேயே பல முனைகளில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனைத் தெளிவு தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

பிறரைச் சார்ந்திருத்தல் அல்லது வெளியாரைச் சார்ந்திருத்தல் என்ற சார்பு நிலை அரசியலில் அவர்கள் ஊறிப் போயிருந்தார்கள். தமிழ் மக்களையும் அந்த அரசியலில் நம்பிக்கை கொள்ளச் செய்திருந்தார்கள். ஆனால் பிறரைச் சார்ந்திருப்பதும், வெளியாரைச் சார்ந்து நம்பியிருப்பதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவ மாட்டாது என்ற உண்மை இப்போது அவர்களுக்கு உறைத்திருப்பதாகவே தெரிகின்றது.

ஒற்றை ஆட்சி முறையின் மூலம் ஒரே நாடாக இலங்கையைப் பேணுவதற்கு முயற்சிக்கின்ற ராஜபக்சக்களும், சிங்கள பௌத்த தேசியவாதிகளும், பேரின அரசியல்வாதிகளும் நினைவேந்தல் நிகழ்வுகள் போன்ற அடிப்படை உரிமை சார்ந்த விடயங்களை இனவாதப் போக்கில் அரசியலாக்கி நாட்டை சீரழிக்க முற்படக்கூடாது. பன்மைத்தன்மையைப் பேண வேண்டும். பல்லின மக்களும் சமஉரிமை உடையவர்களாக இந்த நாட்டில் சமாதானத்துடன், ஐக்கியமாக வாழ்வதற்கு வழி செய்ய வேண்டியது அவசியம்.

சிங்கள பௌத்த தேசியத்தை வலுப்படுத்தி, அதனை மேம்படுத்துவதற்கு மேற்கொள்கின்ற இனவாத அரசியல் முயற்சிகள் இறுதியில் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேவேளை, இனவாத அரசியல் போக்கைக் கைவிடுவதற்கு அரச தரப்பினரும் சிங்கள பௌத்த பேரின தேசியவாதிகளும் முன்வராத நிலையில், தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துகின்ற தமிழ் அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் தங்களுக்குள் ஒன்றிணைந்து ஓர் அரசியல் அமைப்பின் கீழ் (கவனிக்க வேண்டியது – ஓர் அரசியல் கட்சியின் கீழ் அல்ல) ஒன்றிணைந்து, பல முனைகளிலான நடவடிக்கைகளின் மூலம் தமது அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும். செய்வார்களா?

 -பி.மாணிக்கவாசகம்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles