30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர்களை சந்தித்த இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள்

நியூசிலாந்துக்கு ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நியூசிலாந்து முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோரை அண்மையில் சந்தித்தது.இந்தச் சந்திப்பில் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவ ரீதியான பல்வகைத் தன்மையைக் கட்டியெழுப்புதல் தொடர்பில் முன்னாள் பிரதமர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.2017 முதல் 2023 வரை நியூசிலாந்தில் பிரதமர் பதவியை வகித்த ஜசிந்தா ஆடர்ன் தனது பதவி காலத்தில் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் போன்று கொவிட் 19 தொற்று நோய் நிலைமையில் தமது நாட்டுக்கு தலைமை வகித்த அனுபவங்களைப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
விசேடமாக அவரது காலப்பகுதியில் குழந்தைகளைப் பார்ப்பதற்காக தொழிலை விட்டுச்சென்ற பெண்கள் மீண்டும் தொழிற்சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கொள்கை, சமமான சம்பளத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குழந்தைப் பிறப்பின் போது பெற்றோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல், குழந்தை வறுமைத் தன்மையை குறைத்தல் போன்ற நாட்டிலும் அரசியலிலும் பாலின சமத்துவத்துக்குள் உள்வாங்கப்படாத ஏனையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட விடயங்கள் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.அத்துடன் நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமரான ஹெலன் கிளார்க் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திடம் தமது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், விசேடமாகப் பெண்களை வலுப்படுத்துவதற்காகத் தனது பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஓய்வூதிய காலத்துக்காக சேமிப்பதற்காகப் பெண்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் சிவில் விவாக சீர்திருத்தங்கள் தொடர்பான தமது கருத்துக்களை முன்வைத்தார்
இலங்கைப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தை வரவேற்பதற்காக நியூசிலாந்தின் மாஓரி (Maori) சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலாச்சார நிகழ்வொன்றும் இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஒன்றியத்தின் உறுப்பினர்களான சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, சீதா அரம்பேபொல, ரோஹினீ குமாரி விஜேரத்ன, சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி,  கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, சட்டத்தரணி தலதா அதுகோரல, கோகிலா குணவர்தன, முதிதா பிரிஸான்தி, ராஜிகா விக்கிரமசிங்ஹ, மஞ்சுலா திசாநாயக,   (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திசாநாயக, பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய உள்ளிட்டோரும் இதன் போது கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles