பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, உபாதை காரணமாக இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு தொடை பகுதியில் உபாதை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அணியின் பயிற்சி அமர்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை.
உபாதையால் அவதிப்பட்டு வரும் ரோஹித் சர்மா முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், நியூசிலாந்து போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அரையிறுதி போட்டியில் விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் இந்திய அணியை சுப்மான் கில் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடப்பு சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியின் துணைக்தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் சுப்மன் கில் அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.