நிவாரணம் பெறும் தரப்பினரை இனங்காண்பதில் சிக்கல் – அமைச்சர் பந்துல குணவர்தன

0
237

பெருந்தோட்ட மக்கள் அதேபோன்று நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக தெளிவான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நிகழ்தகையூடாக இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் டான் தொலைக்காட்சி சார்பாக பங்கேற்ற ஊடகவியலாளர், பெருந்தோட்டப் பகுதிகளில் போசணை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் போசணை மட்டத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளுக்கு மட்டுமல்ல முழு நாட்டிலும் அதிக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள குடும்பங்களை சமூகநல சட்டமூலத்தினூடாக இனங்கண்டு நிதி நிவாரணம் அதேபோன்று ஏனைய நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திலும் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அவசர நிவாரணம் தேவைப்படும் தரப்பினரை இனங்காணும் செயற்பாடுகள் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லை.

எனவே, இவ்வாறான தரப்பினரை இனங்காணுவதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. குறித்த தரப்பினர் இனங்காணப்பட்டவுடன் அவசர நிவாரணம் தேவைப்படும் தரப்பினருக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.