நாடு முகங்கொடுத்துவரும் நீண்டகால சவால்களைக் கையாள்வதற்கும் நிலையான சுபீட்சத்தை அடைந்துகொள்வதற்கும் இலங்கையும், உலக வங்கியும் கூட்டிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியம் என உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா வலியுறுத்தியுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த புதன்கிழமை நாட்டுக்கு வருகைதந்த உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகளுடன் பரந்துபட்ட சந்திப்புக்களை நடாத்தியிருந்தார்.
இச்சந்திப்புக்களின்போது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டின் மிகமுக்கிய பங்காளியாக உலக வங்கி திகழ்வதாகவும், இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தமது உதவிகள் தொடரும் எனவும் அஜய் பங்கா உறுதியளித்தார்.
அதேவேளை நாடு முகங்கொடுத்துவரும் நீண்டகால சவால்களைக் கையாள்வதற்கும் நிலையான சுபீட்சத்தை அடைந்துகொள்வதற்கும் இருதரப்பினரும் கூட்டிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோன்று கல்வி, சுற்றுலா, சுகாதாரம், விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு, வர்த்தகம் மற்றும் முதலீடு என்பன உள்ளடங்கலாக இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கக்கூடிய துறைகளில் சமகால மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக்கொள்வது குறித்து இருதரப்பினரும் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அத்தோடு இயற்கை மற்றும் பாரம்பரிய கலாசார வளங்களின் நிலைத்திருப்பை உறுதிசெய்வதற்கும், புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், செயற்திறன்மிக்க சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்புவதற்கும் ஏற்றவாறான செயற்திட்டங்கள் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்புச்செய்யத் தயாராக இருப்பதாகவும் அஜய் பங்கா இதன்போது தெரிவித்தார்.
மேலும் நாட்டின் நிலையான வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகள், காலநிலை சவால்களிலிருந்து மீண்டெழல் மற்றும் மனிதவள அபிவிருத்தி என்பவற்றுக்கு அவசியமான உதவிகள் ஊடாக இலங்கையின் நீண்டகால அபிலாஷைகளை அடைவதற்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அதன் தலைவர் அஜய் பங்கா உத்தரவாதமளித்தார்.