பொலிஸ்மா அதிபர் தேசபந்துதென்னக்கோன் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமரின் நாடாளுமன்ற உரையின் மூலம் வலுவற்றதாக்க முடியாது என சட்டத்தரணிகள் அமைப்பான சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது.
தேசபந்துதென்னக்கோனின் பதவி தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பிலும் அதன் பின்னர் ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும் பொதுமக்களிற்கு தெளிவுபடுத்துவதற்காக நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் சட்டத்தரணிகள் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே கடைப்பிடிக்க மறுக்கும் போக்கினை அரசாங்கம் சமீபத்தில் பின்பற்றுவதை சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் அமைப்பு இது அனைத்து அம்சங்களிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையான விடயம் என தெரிவித்துள்ளது.
தேசபந்துதென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக தொடர்ந்து பணிபுரிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் அந்த பதவிக்கான அதிகாரங்களை பயன்படுத்த முயன்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என சிலர் தெரிவிப்பதை அவர் நிராகரித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை உயர்நீதிமன்றம் சவாலிற்குஉட்படுத்த முடியாது என பிரதமர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளமை தவறான விடயம் என தெரிவித்துள்ள சட்டத்தரணி சாலியபீரிஸ் அரசியலமைப்பு சட்டத்தின் 41ஜே பிரிவின்படி அரசியலமைப்பு சபையின் விவகாரங்களில் கூட உயர்நீதிமன்றம் தனது அடிப்படை உரிமைகள் நியாயாதிக்கத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை பெற்றுள்ளது என அவர்குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 22 வருடங்களாக உயர்நீதிமன்றம் இந்த பிரத்யேக நியாயாதிக்கத்தை பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதியின் தீர்மானங்களை அடிப்படை உரிமை மீறல் மனுவின் மூலம் சவாலிற்கு உட்படுத்த முடியும் என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் பதில்பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதி தவறினால்,அரசமைப்பின் ஏற்பாட்டின் படி ஜனாதிபதி பொருத்தமான நபருக்கு கடமைகள் பொறுப்புகளை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வலுவற்றதாக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.