பல வெளிநாட்டு பிரஜைகளையும் உள்ளூர் மக்களையும் குறிவைத்து இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் வெளிநாட்டு பிரஜை உட்பட 33 பேரை நீர்கொழும்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.டிக்டொக் வீடியோக்களை லைக் செய்வதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் பணம் தருவதாக கூறி வட்ஸ்அப் குழு ஒன்றில் பெண்ணொருவர் இணைந்துள்ளார்.
ஆரம்பத்தில் லைக் மற்றும் கமெண்ட் செய்ததற்காக இந்த பெண் பணம் பெற்றுள்ளார். பின்னர் தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொள்ள வங்கிக் கணக்கில் 5.4 மில்லியன் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பணத்தை முதலீடு செய்த போதிலும் அவர் திரும்ப பணத்தை பெறவில்லை. இந்நிலையில், குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பெண்ணின் முறைப்பாட்டிற்கு அமைய வங்கிக் கணக்குகள் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்தனர். இதேவேளை, பீட்சா ஆர்டர் செய்யப்பட்ட வங்கி கணக்கொன்றின் மூலம் நீர்கொழும்பிலுள்ள வீடொன்றில் சோதனை நடத்திய போது இரண்டு பெண்கள் உட்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 57 கையடக்க தொலைபேசிகள் , 13 கணினிகள் மற்றும் 3 மடிக்கணினிகளை அதிகாரிகளால் கைப்பற்ப்பட்டன.நீர்கொழும்பில் மற்றொரு சொகுசு விட்டில் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 19 கூடுதல் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த இடத்தில் இருந்து 52 மொபைல் போன்கள் மற்றும் 33 கணினிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொலிஸார் கைப்பற்றினர்.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் வெளிநாட்டவர்களும் சிக்கியது தெரியவந்தது.
இவர்களின் கிளைகள் துபாய் மற்றும் ஆப்கான் இராச்சியங்களிலும் இருப்பதும் தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.