நுவரெலியாவில், கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன இளைஞர், நுவரெலியா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து, இன்று காலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும், 20 வயதுடைய சுந்தரலிங்கம் சசிதரன் என்ற இளைஞரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை காணவில்லை என, இளைஞனின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில், கடந்த 6 ஆம் திகதி முறைபாடு செய்திருந்தனர். இந்த முறைப்பாட்டில், கடந்த 3 ஆம் திகதி, வீட்டிற்கு விறகு தேடி வருவதாக கூறிவிட்டு சென்ற இளைஞர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும், விறகு தேடி சென்ற பகுதியில், ஆற்றை கடக்க முற்பட்ட போது, கால் தவறி ஆற்றில் விழுந்து, நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சி, அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த, சீ.சீ.டீ.வீ காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். இந்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், தேடுதல் பணியிலும் ஈடுப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே, குறித்த இளைஞர், சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடை ஒன்றில் இருந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா நீதவானின் மரண விசாரணைகளின் பின்னர், சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், விசேட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.