நுவரெலியாவில், சிறுத்தையை கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு புதைக்கப்பட்ட சிறுத்தை, நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளால், இன்று மீட்கப்பட்டதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.
கடந்த 21 ஆம் திகதி, காய்கறி தோட்ட உரிமையாளர், உயிரிழந்த சிறுத்தையை, வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புதைத்துள்ளார்.
சந்தேக நபர், ஆடு வளர்ப்பு மற்றும் கோழிப் பண்ணை நடத்தி வருவதாகவும், சிறுத்தை, கோழிகளை வேட்டையாட வருவதால், கோழி மற்றும் ஆடுகளை காப்பாற்றுவதற்காக, பண்ணையில் மின்சார இணைப்பை மேற்கொண்டிருக்கலாம் எனவும், வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில், ஹட்டன் நீதவானின் உத்தரவின் பிரகாரம், இன்று மீட்கப்பட்ட 4 வயதான சிறுத்தை, பிரேத பரிசோதனைக்காக, ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.