நுவரெலியாவில், தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு, நஷ்டஈட்டுத் தொகை!

0
155

நுவரெலியா மஸ்கெலியா சாமிமலை கவரவில தோட்டத்தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நல்லையா சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு, 50 இலட்சம் ரூபா நஷ்டஈட்டு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் மனைவிக்கு, குறித்த தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குடும்பத்தினருக்கு, 20 பேர்ச் காணியும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான எழுத்து மூல ஆவணத்தை, ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கு, அனுப்பி வைத்துள்ளனர்.
ஹொரண பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான சாமிமலை கவரவில தோட்டத்தில் வசித்து வந்த, 33 வயதுடைய நல்லையா சிவக்குமார் என்ற தொழிலாளி ஒருவர், கடந்த மாதம் 24 ஆம் திகதி, மின்சாரம் தாக்கி, கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்தார்.
அத்துடன், மின்சாரம் தாக்கியே அவரது மரணம் ஏற்பட்டுள்ளதாக, கண்டி சட்டவைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரின் மரணம் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழுவினர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதுடன், பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாருக்கு, நியாயமான இழப்பீட்டுத் தொகை ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், ஹொரண பெருந்தோட்ட கம்பனியிடம் முன்வைத்தனர். அதற்கமைய, உயிரிழந்த நல்லையா சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு, 50 இலட்ச ரூபா நஷ்டஈடு வழங்க, தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.