நுவரெலியா, தலவாக்கலை – ஹொலிறூட் ஈஸ்ட் பிரிவு தோட்ட மக்கள், 2019 இல், தீ பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அசௌகரிங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். தலவாக்கலை – ஹொலிறூட் ஈஸ்ட் பிரிவு தோட்டத்தில் உள்ள லயக் குடியிருப்பில், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, 24 வீடுகளைக் கொண்ட லயக் குடியிருப்பு, முற்றாக எரிந்து தீக்கிரையானது. இதனால், 24 குடும்பங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகினர். அதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள், தோட்டத்தில் உள்ள பொது கலாசார மண்டபத்தில், எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில், தங்க வைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும், 3 வருடங்களாக, அக் கலாசார மண்டபத்தில், பல்வேறு அசௌகரிங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான, புதிய வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல், கடந்த 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டப்பட்டு, பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வீடமைப்பு பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்போது, அதன் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. எனினும், பொது கலாசார மண்டபத்தில், சேலைகள், பெட்சீட்டுகளால் மறைத்து, பலர் வாழத் தொடங்கியுள்ளனர்.
எனவே, உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி தருமாறு, பாதிக்கப்பட்ட மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.