நுவரெலியா ஹட்டன் டிக்கோயா சமர்வீல் தோட்டப் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சிறுத்தை புலி தொடர்பில், இன்று, மூன்று பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாய வனஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைவாக, இன்று, ஹட்டன் டிக்கோயா வனராஜா சமர்வீல் தோட்ட பகுதிக்கு, சந்ரா ஹேரத் தலைமையில் சென்ற குழுவினால், உயிர்ழந்த சிறுத்தை புலி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதன் போது, நல்லதன்னி வனவிலங்கு அதிகாரி மற்றும் சிறுத்தை புலி பொறியில் சிக்குண்டு மரத்தில் இருந்ததை இனங்கண்டு, 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கிய இளைஞர், சிறுத்தை புலி எரியிருந்த மரத்தை வெட்டியவர் ஆகியோரிடம், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதேவேளை, சிறுத்தையை மீட்கும் நடவடிக்கையில், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஈடுபட்ட போது, சிறுத்தை ஏறியிருந்த மரத்தை வெட்டி சாய்த்துள்ளனர்.
அதன் போது, மரம், சிறுத்தையின் மீது விழுந்தமையினால், சிறுத்தை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
குறித்த அதிகாரிகளின் அலட்சியத்தால், சிறுத்தை புலி உயிரிழந்தது என உருதி செய்யப்பட்டால், வனவிலங்கு அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.