நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் (இலங்கை நேரப்படி சனிக்கிழமை) நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்த நசவ் ஆடுகளத்தில் நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 104 ஒட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆனால், அந்த வெற்றி தென் ஆபிரிக்காவுக்கு இலகுவாக வந்துவிடவில்லை.
ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர ஆகியோரின் பொறுப்பணர்வுடன்கூடிய துடுப்பாட்டங்களே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தன.
தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.
குவின்டன் டி கொக் (0) முதல் பந்திலேயே தவறான கணிப்பு காரணமாக ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து ரீஸா ஹென்றிக்ஸ் (3), அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (0), ஹென்றிக் க்ளாசன் (4) ஆகியோர் ஆட்டம் இழக்க, தென் ஆபிரிக்கா 5ஆவது ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
மிகவும் இக்காட்டான வேளையில் ஜோடி சேர்ந்த ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்து அணிக்கு தெம்பூட்டினர். ஸ்டப்ஸ் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
கடைசி 3 ஓவர்களில் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 25 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
18ஆவது ஓவரில் டேவிட் மில்லரால் 9 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் மாக்கோ ஜென்சன் (3) ஆட்டம் இழந்தார்.
அடுத்த ஓவரில் மில்லர் 18 ஓட்டங்களை விளாசி அரைச் சதம் குவித்ததுடன் தென் ஆபிரிக்காவுக்கு மிகவும் அவசியமான வெற்றியையும் ஈட்டிக்கொடுத்தார்.
கடைசிக் கட்டத்தில் அதிரடியில் இறங்கிய டேவிட் மில்லர் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் விவியன் கிங்மா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லோகன் வென் பீக் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.
12ஆவது ஓவரில் நெதர்லாந்தின் 6ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை 48 ஓட்டங்களாக இருந்தது.
மத்திய வரிசை வீரர்களான சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் (40), லோகன் வென் பீக் (23) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
அவர்களைவிட விக்ரம்ஜித் சிங் (12), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஒட்நீல் பாட்மன் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அன்றிச் நோக்கியா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: டேவிட் மில்லர்.