நெருக்கடியான வேளையில் அக்சார், பாண்டே, முக்கேஷ் அபாரம், ஹைதராபாத்தை வென்றது டெல்ஹி

0
129

மிகவும் நெருக்கடியான வேளையில் அக்சார் பட்டேல், மனிஷ் பாண்டே ஆகியோர் 6ஆவது விக்கெட்டில் ஏற்படுத்திய பெறுமதியான இணைப்பாட்டமும் முக்கேஷ் குமார் துல்லியமாக வீசிய கடைசி ஓவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு 8 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

அப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் வீரர் வொஷிங்டன் சுந்தர் அபரிமிதமாக சகலதுறைகளிலும் பிரகாசித்த போதிலும் அவரது ஆற்றல்கள் இறுதியில் வீண் போயின.

ஹைதராபாத் உப்பல், ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (24) இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சுமாரான மொத்த எண்ணிக்கைகளுக்கு மத்தியிலும் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது.