டெக்சாஸ் டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மிகவும் இறுக்கமாக நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
நேபாளத்தின் கடும் சவாலுக்கு மத்தியிலேயே நெதர்லாந்து வெற்றிபெற்றது.
அனுபவசாலியான மெக்ஸ் ஓ’தௌத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றி அடையச் செய்தார்.
அவரைவிட விக்ரம்ஜித் சிங் 22 ஓட்டங்களையும் சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் 14 ஓட்டங்களையும் பாஸ் டி லீட் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
18ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 89 ஓட்டங்களாக இருந்தபோது ஓ’தௌத் கொடுத்த இலகுவான பிடியை நேபாள அணித் தலைவர் பவ்டெல் தவறவிட்டார்.
அடுத்த ஓவரில் அதிரடியாகக் துடுப்பெடுத்தாடிய ஓ’தௌத், பாஸ் டி லீட் ஆகிய இருவரும் வெற்றியை உறுதிசெய்தனர்.
பந்துவீச்சில் திப்பேந்த்ரா சிங் அய்ரீ 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சோம்பால் காமி 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அபினாஷ் பொஹாரா 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் ரோஹித் பவ்டெல் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 35 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட காரண் கே.சி. 17 ஓட்டங்களையும் குல்சான் ஜா 14 ஓட்டங்களையும் அனில் சாஹ் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
வேறு எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கையை எட்டவில்லை.
பந்துவீச்சில் லோகன் வென் பீக் 18 ஓட்டங்களுக்கு 3 விச்கெட்களையும் டிம் ப்றிங்ள் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் போல் வென் மீக்கரன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: டிம் ப்ரிங்ள்