சுகாதார அமைச்சு முறையாக செற்படுவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். சுகாதார அமைச்சு , கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் அரசாங்கம் என்பன மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையின் காணமாகவே இன்று கொவிட் பரவலை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சுகாதார அமைச்சு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவையாகும். நாம் எந்த வேலைகளையும் செய்வதில்லை என அவர் கூறியுள்ளார். சுகாதார அமைச்சராக இரவு பகலாக நான் சேவையாற்றுகின்றேன்.
சுகாதார அமைச்சு, கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் அரசாங்கம் என்பன மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தற்போது கொவிட் பரவலை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். உலகின் பல நாடுகளில் கொவிட் பரவலில் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது நாளாந்தம் 2 இலட்சம் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எமது வலயத்தில் நூற்றுக்கு 63 வீதமானோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா , இங்கிலாந்து , பிரான்ஸ் , இதாலி , ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் கொவிட் வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது. மரணங்களும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. ஆனால் நாம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமையால் இன்று தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதோடு , மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
மேலும், தொற்றுக்குள்ளாகி குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் சேவையாற்றவில்லை என குறிப்பிடுவது போலியான குற்றச்சாட்டாகும். இதே போன்று கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தில் அரசாங்கம் தோல்வியடையும் என்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது. எனினும் அதனையும் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளோம் என்றார்.