புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பசுமை ஐதரசன், பச்சை அமோனியாவுக்குமான மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாக வடக்கு மாகாணம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.
இதன் ஓர் அங்கமாக அதானி குழுமத்தின் முதலீட்டின் கீழ் மன்னாரில் காற்றாலை திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த காற்றாலை திட்டமானது சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி சிலர் எதிர்ப்புகளை வெளியிட்டுவருகின்றனர்.
மன்னார் ஆயரும் இந்த விடயத்தைத் தாம் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
பசுமை அபிவிருத்தி திட்டங்கள்தான் ஒப்பீட்டு அடிப்படையில் சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்த திட்டங்களாக நோக்கப்படுகின்றன – ஒப்பீட்டு அடிப்படையில் மிகவும் குறைவான சூழல் பாதிப்புகள் கொண்ட திட்டங்கள்.
இதன் காரணமாகவே உலகெங்கும் பசுமை அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.
அதானி குழுமத்தின் திட்டங்கள் இலங்கையைப் பொறுத்த வரையில் வரப்பிரசாதமான திட்டங்களாகவே நோக்கப்படுகின்றது – குறிப்பாக இதனால், வடக்கு மாகாண மக்கள் அதிக நன்மையை பெறுவர்.
அதானி குழுமத்தின் காற்றாலை திட்டத்தால் மன்னார் பகுதி தேசிய அளவில் கவனிப்பைப் பெறும் இடமாக மாற்றமுறும்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் தொழில்துறை அபிவிருத்திக்கு இந்தத் திட்டம் அத்தியாவசியமானது.
எந்தவோர் அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்கும்போதும் சுற்றுச் சூழலுக்கு சிறிதளவு தாக்கம் ஏற்படவே செய்யும்.
ஒப்பீட்டடிப்படையில் அதன் தாக்கத்தின் அளவையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பு அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறுகின்றது.
இந்தத் திட்டத்தால் பறவைகள் பாதிக்கப்படும் என்பதே அவர்களின் வாதம்.
அவ்வாறாயின் எந்தவொரு சிறிய பாதிப்பும் இல்லாமல் எவ்வாறு காற்றாலை திட்டத்தை முன்னெடுக்க முடியும்? காற்றாலை திட்டத்தை எதிர்ப்போர் பல்லுயிர்கள் தொடர்பில் கரிசனை வெளியிடுகின்றனர்.
இவ்வாறு, இன்று – சுற்றுச் சூழல் தொடர்பில் கரிசனை காண்பிக்கும் எவருமே வடக்கு கடல் பகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டபோது அதனால் ஏற் படவுள்ள சூழலியல் பிரச்சினைகள் மற்றும் அது எவ்வாறு கடல்வாழ் உயிரினங்களை அழிக்கும் என்பது பற்றியெல்லாம் கேள்வி எழுப்பவில்லை.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் சுற்றுச் சூழலுக்கு மோசமான தீங்குகளை ஏற்படுத்துகின்றது.
ஆனால், அது தொடர்பில் எவருமே பேசவில்லை.
அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை.
ஆனால், ஒப்பீட்டு அடிப்படையில் மிகவும் குறைவான சூழலியல் தாக்கங்களை கொண்டிருக்கும் காற்றாலை திட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறுகின்றனர்.
இது உண்மையிலேயே சுற்றுச் சூழல் தொடர்பான கரிசனையாக அல்லது இதற்கு பின்னால் வேறு நிகழ்ச்சிநிரல் ஏதும் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடிய வில்லை.
வடக்கு மகாணத்தை நோக்கி இவ்வாறான பசுமை அபிவிருத்தி திட்டங்கள் வருகின்ற போது அதனை தமிழ் மக்கள் வரவேற்க வேண்டும்.
வடக்கு – கிழக்கு மாகாணத்திலிருந்து ஆளுமையுள்ள மத்தியதர வர்க்க மக்கள் வெளியேறி வருகின்றனர்.
தொழில்துறை வளர்ச்சியடையாமையும் இதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும்.