24.9 C
Colombo
Tuesday, November 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பட்டதாரிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (29) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எங்களால் மேற்கொள்ளப்படவுள்ள ஜனநாயக அடிப்படையிலான போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனத்தை ஈர்ப்பதுடன் எங்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இலங்கையில் மிக நீண்ட காலமாக பட்டதாரிகளுக்கான வேலையில்லா பிரச்சனை நிலவி வரும் சூழலில் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.

இலங்கையின் கல்வித் திட்டத்தின் கீழ் 20 வருடங்கள் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறி பின்னர் சாதாரண கூலித் தொழிலுக்கே சென்று வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வேண்டிய மனச் சங்கடமான நிலையினையே எதிர்கொள்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் தமது எதிர்கால கனவுக்காக படித்து பட்டதாரிகளாகி இன்று எவ்விதத்திலும் பயனற்றவர்களாக வேலையில்லா பட்டதாரிகள் என்ற பெயரோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான எமது அவல நிலைமை எதிர்கால மாணவர்களுக்கும் கல்வி மீதான விரக்தியையும் பட்டப்படிப்பு மீதான அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் இலங்கையின் கல்வி அறிவு மற்றும் வளர்ச்சியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இவற்றை அறிந்தும் அறியாமலும் உள்ள அரசாங்கத்தின் அசமந்தபோக்கானது நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய கல்வி கற்ற இளைஞர்களை பயந்தவர்களாக வாழ வைத்துள்ளது.

இதன் விரக்தியாலும் மன அழுத்தத்தாலும் நாடு தழுவியரீதியில் பட்டதாரிகள் அனைவரும் ஜனநாயக அடிப்படையில் அமைதியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வடமாகாண பட்டதாரிகளாகிய நாமும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பை மேற்கொள்ளவுள்ளோம்.

1. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் போட்டிப்பரீட்சைகள் நிராகரிப்பு செய்ய வேண்டும்

2. ஏற்கனவே அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மீண்டும் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையில் கொண்டு வருதல் நியாயமற்றது .அது வேலையற்ற பட்டதாரிகளை பாதிக்கின்றது.

3. வடமாகனத்திலுள்ள விசேட தேவையுடைய பட்டதாரிகளின் வாழ்வியல் தொடர்பிலான அரசாங்கத்தின் கரிசனை என்ன?

4. வேலையற்றப்பட்டதாரிகளும் சமூகத்தில் எதிர்கொள்ளும் அவமானங்களும் சவால்களும் அதன் ஊடாக ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் பட்டதாரிகளின் எதிர்காலம் குறித்தும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் என்ன ?

இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தாது ஜனநாயக முறையிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து நமது கோரிக்கைகள் உள்ளடக்கிய மகஜரினை ஆளுநரினூடாக ஜனாதிபதிக்கு கையளிப்பதுடன் வடக்கு மாகணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்குமான மகஜர் கையளிப்பு இடம்பெறவிருப்பதால் வடக்கு மாகாண பட்டதாரிகள் உங்கள் நேரங்களை ஒதுக்கி இம் மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு”நமக்காய் நாமே” என்னும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள நிலையில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் கலந்து கொள்ளுங்கள்.

இது தொடர்பிலான சந்தேகங்கள் மற்றும் தெளிவுபடுத்தலுக்கு 0773539992 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்புகொள்ள முடியும் என தெரிவித்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles