29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பணயக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸின் நிபந்தனையை இஸ்ரேல் பிரதமர் நிராகரிப்பு

காசா போரின் மையப் பகுதியாக மாறியிருக்கும் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேலிய இராணுவம் நேற்றும் குண்டு மழை பொழிந்த நிலையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸ் அமைப்பு விடுத்த நிபந்தனையை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

எனினும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்ப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கு வரும்படி கோரி இஸ்ரேலுக்குள் நெதன்யாகுவுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

கான் யூனிஸில் ஞாயிறு இரவு தொடக்கம் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று உயிர்ச்சேதங்கள் அதிகரித்து வருவதோடு இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே தீவிர மோதல் நீடித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதை இஸ்ரேல் நிராகரித்ததால், பணயக்கைதிகள் வீடு திரும்புவதற்கு வாய்ப்பு இல்லை என்று மூத்த ஹமாஸ் அதிகாரியான சமி அபூ சுஹ்ரி தெரிவித்துள்ளார்.

“எமது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பகரமாக, போரை முடிவுக்குக் கொண்டுவந்து எமது படைகளை காசாவில் இருந்து வாபஸ் பெறும்படியும் அனைத்து கொலைகாரர்கள் மற்றும் கற்பழிப்பாளர்களை விடுவிக்கும்படியும் ஹமாஸ் கோருகிறது” என்று நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஹமாஸை அப்படியே விட்டுவிடும்படியும் கோருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கொடிய ஹமாஸிடம் சரணடையும் நிபந்தனைகளை நான் முற்றாக நிராகரிக்கிறேன்” என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போதே சுமார் 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். எனினும் கடந்த நவம்பரில் கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட உடன்படிக்கையில் 100க்கும் அதிகமான பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு பகரமான இஸ்ரேல் சிறையில் இருக்கும் 240 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles