பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி கையெழுத்து சேரிக்கும் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தார்.
வடக்கிலிருந்து தெற்கு வரையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார்.
சிங்கள மக்களும் இதில் ஆர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில், தமிழ்நாட்டில் ஒருவர் சமூக நல வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கின்றார்.
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டின்மீது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம்.
அதாவது, பொருளாதார நெருக்கடியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் செய்யப்பட்டலாம்.
அதேவேளை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜிகாத் பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கை ஊடாக தமிழ்நாட்டுக்குள் உள்நுழைந்து தாக்குதல்களை மேற்கொள்ளலாம் –
எனவே, விரைவாக செயல்படுவதற்கு ஏற்றவாறான தீவிரவாத முறியடிப்பு
படைப்பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசாங்கம் உருவாக்க வேண்டுமென்று குறித்த சமூக நல வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படும் நிலையில், இலங்கை ஊடாக தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்றவாறான பார்வை தமிழ்நாட்டில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இதனை அரசாங்கம் எவ்வாறு எடுத்துக் கொள்ளும்? தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979இல் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போது, தமிழர் விடுதலைக் கூட்டணியே பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது.
இந்த சட்ட மூலத்தை பொதுவெளிகளில் எதிர்த்துப் பேசிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. பாராளுமன்றத்தில் தமிழர்களின் எதிர்ப்பின்றியே பயங்கரவாத தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மூலத்தின் பிரதான இலக்கு என்ன என்பதை அனைவருமே அறிந்திருந்தனர்.
தமிழ் ஆயுத இயக்கங்களையும் அதற்கு ஆதரவானவர்களையும் வேட்டையாடுவதுதான் இந்த சட்ட மூலத்தின் பிரதான இலக்காகும்.
அதேவேளை, தேவைப்பட்டால் தங்களின் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கும் இந்த சட்ட மூலத்தை பயன்படுத்திக் கொள்ளவும் ஆட்சியிலிருந்தவர்கள் பின்நிற்கவில்லை.
இந்த அடிப்படையில்தான், இப்போது தென்னிலங்கையிருக்கும் பலரும் இதுபற்றி பேசுகின்றனர்.
ஆனால், இந்த சட்ட மூலத்தின் மூலம் அனைத்து தமிழ் மக்களையும் பயங்கரவாதிகள் போன்று நடத்த முற்பட்டபோது தென்னிலங்கை அமைதியாகவே இருந்தது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
யுத்தம் முடிவுற்றதன் பின்னர் இந்த சட்ட மூலத்தை வைத்திருப்பதில் எந்தவொரு நியாயமும் இல்லை.
இந்த அடிப்படையில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளிலிருந்து பல்வேறு சர்வதேச மனித உரிமைக்ள அமைப்புக்களும் இந்த சட்ட மூலத்தை நீக்குமாறு கோரிவருகின்றன.
ஆனாலும் இன்றுவரையில் அது நடக்கவில்லை.
ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலமொன்றை கொண்டுவரப் போவதாகக் கூறப்பட்டது.
சில விடயங்களும் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், எதுவும் நடைபெறவில்லை.
மீளவும் ராஜபக்ஷக்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும் இதனை நீக்கி புதிய சட்ட மூலமொன்றை கொண்டுவரப் போவதாகக் கூறப்பட்டது.
எதுவும் நடக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சுமந்திரன் கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
அது நிறைவுற்று சில நாட்களிலேயே தமிழ்நாட்டுக்கு இலங்கையிலிருந்து ஆபத்து என்று கூறப்பட்டிருக்கின்றது.
இவ்வாறானதொரு வழக்கு எத்தகைய நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டது? இதனை செய்தவரின் பின்னணி என்ன? எவரும் அறியார் – ஆனால், இவ்வாறான விடயங்களை சாதகமா கக் கொண்டு அரசாங்கம் அதன் நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.
இதனை தமிழ்த் தரப்புக்கள் கவனமாகக் கையாளவேண்டும்.