பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் ஓமானை சுப்பர் ஓவரில் வென்றது நமிபியா

0
63

நமிபியா – ஓமான் அணிகளுக்கு இடையில் பார்படோஸ், கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுப்பர் ஓவர் முறையில் நமிபியா வெற்றிபெற்றது.

பிலான் கான் வீசிய சுப்பர் ஓவரில் நமிபியா விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் வைஸ் 13 ஓட்டங்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 8 ஓட்டங்களையும் பெற்றனர்.

டேவிட் வைஸ் வீசிய சுப்பர் ஓவரில் ஓமான் ஒரு விக்கெட்டை இழந்து 10 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. நசீம் குஷி 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஸீஷான் மக்சூத் 6 ஓட்டங்களைப் பெற்றார்.இரண்டு அணிகளும் தத்தமது 3ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் ஓமான் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 110 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா கடைசிக் கட்டத்தில் கடும் சவாலை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.  

போட்டியின் 18ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களுடன் சிறந்த நிலையில் இருந்த நமிபியா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. குறிப்பாக மெஹ்ரான் கான் வீசிய கடைசி ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்ந்தமை நமிபியாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

துடுப்பாட்டத்தில் ஜான் ப்ரைலின்க் 45 ஓட்டங்களையும் நிக்கலஸ் டெவின் 24 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மெஹ்ரான் கான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 10 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த ஓமான், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் 100 ஓட்டங்களைக் கடந்தது.

காலித் கய்ல் 34 ஓட்டங்களையும் ஸீஷான் மக்சூத் 22 ஓட்டங்களையும் அயான் கான் 15 ஓட்டங்களையும் ஷக்கீல் அஹ்மத் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரூபன் ட்ரம்பள்மான் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டேவிட் வைஸ் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.