பலவந்தமாக தந்தையினால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் மாயம்! பரிதவிக்கும் தாயார்

0
95

 போதைக்கு அடிமையான தந்தையினால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ள நிலையில், குழந்தையை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடுவெல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாயின் பராமரிப்பில் இருந்த சிறுவனை போதைக்கு அடிமையான தந்தை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கணவரின் குடிப்பழக்கம் காரணமாக சிறுவனின் தாய், அவரைப் பிரிந்து கடுவெல பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிறுவன் பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் அனுமதித்த பெண் வேலைக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது சிறுவன் பராமரிப்பு நிலையத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அங்கு வந்த அவரது கணவர் சிறுவனை அழைத்துச் சென்றுள்ளமையும் தாய்க்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுவன் காணாமல் போனமை தொடர்பில் தாயார் கடுவெல பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.