நாட்டில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கியுள்ள அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.
யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனமும் நாட்டில் வணிக நடவடிக்கைகளிலிருந்து விலகத் தயாராகி வருவதாக எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.இலங்கை சில்லறை வணிகச்சந்தைக்கு எரிபொருளை விநியோகிக்கச் சீனா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க 2023 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தது.
இதன் கீழ் சீனாவின் சினோபெக் எரிபொருள் லங்கா தனியார் நிறுவனம் அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பாக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.அதன்படி இந்த மூன்று நிறுவனங்களுக்காக 450 சிபெட்கோ நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன.
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சில பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் நாட்டில் தீவிரமாகச் செயல்படாததே இதற்குக் காரணம்.அந்த நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மஹியங்கனையின் தலங்கமுவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் நிரப்பும் குழாய்களில் கடந்த 2 மாதங்களாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனைச் சோதனையிட்ட பதுளை அளவீட்டு அலகு தரநிலை மதிப்பாய்வு அலுவலக அதிகாரிகள் ஒரு எரிபொருள் குழாய் குறைவான எரிபொருளை வழங்குவதாகவும் மற்றைய இரண்டு குழாய்களும் அதிக எரிபொருளை வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.எனினும் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் இயந்திரங்களை ஆய்வு செய்யத் தவறியதால் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.