பாகிஸ்தான்-இந்தியா இன்று மோதல்

0
86

T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களை ஆர்ப்பரிக்கும் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் ஏ பிரிவு போட்டி இன்று நியுயோர்க்கில் நடைபெறும். இரு அணிகளும் இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் அமெரிக்கா 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவுடன் சூப்பா் ஓவரில் தோற்ற அதிர்ச்சியில் பாகிஸ்தன் உள்ளது. அதே நேரம் அயா்லாந்தை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது இந்தியா.எந்த ஐ.சி.சி போட்டி என்றாலும் இந்திய-பாகிஸ்தான் ஆட்டத்துக்காக அனைத்து டிக்கட்களும் விற்று தீா்ந்து விடும். அதே போல் இந்த போட்டிக்கான டிக்கட்டுகளும் விற்று முடிந்து விட்டன. முந்தைய உலகக் கிண்ணப் போட்டியில் நடைபெற்ற T 20 தொடரில் இங்கிலாந்துடன் மோசமாக தோற்றிருந்தது பாகிஸ்தான்.

இன்றைய நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.அயா்லாந்துடனான போட்டியில் ரோஹித் சா்மா அற்புத தொடக்கத்தை அளித்தார். அதே போல் சிறப்பாக விளையாடினால் பாகிஸ்தானுக்கு தலைவலியாக அமையும். மேலும் பிட்ச்சின் செயல்பாடு வேகப்பந்து வீச்சாளா்களுக்கு கைகொடுக்கும். ரிஷப் பந்த், சூரியகுமார் யாதவ், ஷிவம் டுபே, ஹார்த்திக் பாண்டியா, ஜடேஜா, அக்ஸா் படேல் ஆகியோருடன் அயா்லாந்துடன் விளையாடிய அதே அணியே பாகிஸ்தானுடன் போட்டியிலும் விளையாடுகிறது.

அதே நேரம் பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சாளர் முகமது ஆமீா் டெத் ஓவா்களில் சிறப்பாக பந்து வீசுகிறார். இந்தியாவுக்கு எதிரான அவரது முந்தைய சிறப்பான செயல்பாடுகள் இந்த போட்டியிலும் தொடருமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது. துடுப்பாட்டத்தில் பாபா் அஸாம், ஷதாப் கான், முகமது ரிஸ்வான், உஸ்மான் கான் வலுசோ்ப்பா். மேலும் பந்துவீச்சாளர்கள் ஷாஹின் அப்ரிடி வழக்கமான பாணியில் வீசினால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படும்.

இரு அணிகளும் 12 T 20 ஆட்டங்களில் மோதிய நிலையில் இந்தியா 8, பாகிஸ்தான் 3-இல் வென்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. போட்டி நடைபெறும் நஸாவு கவுண்டி மைதானத்தின் ஆடுகளம் மந்தமான நிலையில் உள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது. வானிலையைப் பொறுத்தவரை மேகமூட்டம் உள்ள நிலையில், மழை பெய்ய 60 சதவீதம் வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.