தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் வேட்புமனுத் தாக்கலில் மும்முரமாக இருக்கின்றன. கடந்த சில நாட்களாக ஆட்களைத் தேடி அலைந்தனர். ஒவ்வொரு கட்சிகளிலும் யார் போட்டியிட வேண்டும் என்பதை விடவும் யார் போட்டியிடக்கூடாது என்பதில்தான் ஒவ்வொருவரும் கவனமாக இருந்தனர். இரண்டு தடவைகள் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்களும் போட்டியிடுகின்றனர். அதிகமானவர்கள் ஒருமுறைகூட, தங்களைத் திரும்பிப் பார்த்ததில்லை – இதனால், தங்களின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை அவர்களால் அறியமுடிவதில்லை.
ஆனால், அவ்வாறானவர்கள் அனைவருக்கும் இந்தத் தேர்தல் ஒரு பாடத்தை நிச்சயம் உணர்த்தத்தான் போகின்றது. அதன் பிறகாவது பாடம் படிப்பார்களா என்பதைப் பார்ப்போம்! கடந்த காலம் போதிய பாடங்களை புகட்டியிருக்கின்றது. ஆனால், அந்தப் பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ள எவருமே முயற்சிப்பதாகவோ – ஆகக் குறைந்தது கற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணுவதாகவோ தெரியவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஒரு நெருக்கடியான தேர்தலுக்கு அனைவரும் முகங்கொடுத்திருக்கின்றனர். தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளில் அநேகமானவை முதன்முதலாக நீண்ட காலத்துக்கு பின்னர் வீட்டுச் சின்னத்துக்கு வெளியில் போட்டியிடுகின்றனர்.
வீடு, சங்கு, மான், என்று மோதப் போகின்றனர் – இன்னொருபுறம், வழமைபோல் சைக்கிள் ஓரணியாக நிற்கின்றது. பெரும்பாலான வேட்பாளர் பட்டியலை நோக்கினால், அதிகமான வேட்பாளர்கள் யாரோ ஒருவருக்கு வாக்குச் சேகரிக்கும் நோக்கத்தில்தான் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். உண்மையில், வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும்போது, அடுத்த மாகாண சபைக்கான தகுதியுள்ளவர்கள் – மாநகர சபை, நகர சபை தலைவர்களாவதற்கான தகுதியுள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களை முன்னிறுத்த வேண்டும். அப்போதுதான் அடுத்தகட்ட தலைமைத்துவத்துக்கான ஆட்களைத் தயார் செய்ய முடியும். ஆனால், இப்படி தூரநோக்கோடு சிந்தித்து செயலாற்றக்கூடிய நிலையில் கட்சிகளின் தலைமைகள் இல்லை.
எப்படியாவது தங்களின் தலைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்னும் முனைப்பில் இருப்பதால் தங்களுக்கு சவால் இல்லாதவர்கள்தான் பட்டியலில் இடம்பெறவேண்டும் என்பதில் ஒவ்வொரு கட்சியின் தலைமையும் மிகவும் கவனமாக இருக்கின்றது. தமிழ்த் தேசியம் பேசும் எவருமே இதற்கு விதிவிலக்கல்ல. இவ்வாறு சிந்திப்பவர்கள் தங்களுக்குள் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். அதாவது, மூன்று முறை பாராளுமன்றம் சென்று சாதிக்க முடியாமல்போன விடயத்தை இனிப் போய் எவ்வாறு சாதிக்க முடியும்? இலங்கை பாராளுமன்றத்தில் என்னதான் கத்தினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எதனையும் செய்ய முடியாது. இந்தநிலையில் முன்னவர்களால் சில விடயங்கள் முடியவில்லை என்றால் ஆட்களை மாற்றி அனுப்புவதுதானே சரியானது. ஆனால், கட்சிகளின் தலைமைகள் அதற்குத் தயாராக இல்லை. மூன்று முறைக்கு மேல் பாராளுமன்றம் செல்ல முற்படுபவர்கள் தமிழ் அரசியலுக்குத் தேவையற்றவர்கள்.
ஏனெனில், அவர்கள் புத்தாக்கம்மிக்க தலைமைகள் உருவாவதை தடுக்கின்றனர். அரசியலில் புதிய சிந்தனைக்கு வித்திட மறுப்பவர்கள் இனியும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இருப்பதில் பயனில்லை. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இந்தத் தேர்தல் பலருக்கு புதிய பாடங்களை புகட்ட இருக்கின்றது. ஒவ்வொருவரின் தரத்தையும் அவர்களுக்கு உணர்த்த இருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவில் சில கட்சிகளே அரசியலில் இல்லாமல்போக வேண்டிய தேவையேற்படும். அதேபோல், தாங்கள் இப்போது இருப்பது போன்று இருக்க முடியுமா – இந்தக் கூட்டுகளால் பயனுண்டா என்னும் கேள்விகள் நிச்சயம் எழும். இந்தத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்தும். ஈழநாடு முன்னரும் சில விடயங்களை எச்சரித்திருக்கின்றது. ஆனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை – காலம் தொடர்ந்தும் பாடங்களை போதித்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், அதனை கருத்தில்கொண்டு சிந்திக்கத்தான் எவரும் இல்லை. இந்த அரசியல்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபையும் அவர்களை நம்பிய மக்களை நடுவீதியில் விட்டுவிட்டு ஓடிஒளிந்து கொண்டது.