பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும்போது…!

0
29

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்தியாவிலிருந்து பிறிதொரு நாட்டுக்கு செல்ல முற்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் உறுதிப்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் சில குற்றச்சாட்டுகளை எதிர் கொண்ட நிலையிலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார். ஒரு காலத்தில் தமிழ் மிதவாத தலைவர்கள் பலர் சிறை சென்றிருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் பல மாதங்கள் வரையில் மக்களுக்காக சிறை வாழ்வை அனுபவித்திருக்கின்றனர். அண்மையில் காலஞ்சென்ற மாவை. சேனாதிராசா சிறை வாழ்விலிருந்து விடுதலையானபோது கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் அதனைக் கொண்டாடியிருந்தனர்.

மக்களுக்காக சிறை செல்லும் வரலாற்றை கொண்டிருக்கும் ஈழத்தமிழர் அரசியலில் கிரிமினல் குற்றங்களுக்காக சிறை செல்லும் நிலைமை உருவாகியிருக்கின்றது அத்துடன், பாரம்பரிய கட்சி – பிரதான கட்சியென்று வர்ணிக்கப்படும் இலங்கை தமிழ் அரசு கட்சி நீதிமன்றத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றது.வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவான ஈழத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளை ஒரு காலத்தில் கேட்பதே பெருமையாக நோக்கப்பட்டது – அமிர்தலிங்கத்தின் உரையை கேட்டு, சபாநாயகரே அற்புதமென்று பாராட்டிய வரலாறு போய், பொழுது போகவில்லையா, யாழ்ப்பாணத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சை சிறிது கேட்போம் – வாய்விட்டு சிரிக்கலாம் என்னும் நிலைமை உருவாகியிருக்கின்றது.

இதற்கு உண்மையில் பொறுப்பானவர்கள் யார்? அரசியல்வாதிகளிலும் அரசியல் கட்சிகளிலும் தவறு கண்டுபிடிப்பதை விடவும் வாக்களிப்பவர்கள் தொடர்பில்தான் நாம் சந்திக்க வேண்டியிருக்கின்றது. ஒரு காலத்தில் நவரட்ணம், தர்மலிங்கம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் என்றவாறு தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருந்து உறுப்பினர்களை தெரிவு செய்த வடபுல மக்கள் இன்று எவ்வாறு சந்திக்கின்றனர்? எவ்வாறானவர்களைத் தெரிவு செய்கின்றனர்?

தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் என்றவுடன் பார்த்துப் பார்த்து மாப்பிள்ளை, மணமகள் தேடும் ஈழத்தமிழினமோ தங்களின் அரசியல் எதிர்காலத்துக்கான நபர்களை தெரிவு செய்யும்போது, கண்களில்லாதவர்கள் போன்று வாக்களிக்கின்றது. இந்த நிலைமை மாறாத வரையில் ஈழத் தமிழினம் அரசியலில் உருப்படியான வழியேற்படப் போவதில்லை. தமிழ் அரசுக் கட்சி அதிக ஆசனங்களை பெற்றுவிட்டது. எனவே, பிரதிநிதித்துவங்கள் உறுதியாகிவிட்டன என்று பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை – உண்மையில், இன்றைய அரசியல் சூழலை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலுடன் கூடியவர்களை தமிழினம் தெரிவு செய்திருக்கின்றதா – என்றுதான் கேட்கவேண்டும்.

அப்படிக் கேட்டால் பூச்சியமே எஞ்சும். பாராளுமன்றம் சென்றிருப்பவர்களில் அநேகரை ஓர் அரசியல்வாதியாகக்கூட தென்னிலங்கை ஏற்றுக்கொள்ளுமா என்பதே சந்தேகம்தான். அந்தளவுக்கு தலைமைத்துவ பலவீனம் மேலோங்கியிருக்கின்றது. ஒரு தனித் தலைவர் இல்லாத சூழலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பீட்டடிப்படையில் தலைமையற்ற சூழலை ஒப்பீட்டடிப்படையில் நிவர்த்தி செய்யக்கூடிய ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், கண்களில்லாதவர்கள் போன்று தமிழ் மக்கள் வாக்களித்த காரணத்தால் விடயங்களை கையாளும் தலைமைத்துவ ஆற்றல் இல்லாதவர்களே பெரும்பான்மையாக பாராளுமன்றம் செல்ல நேர்ந்திருக்கின்றது.