பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றது அவுஸ்திரேலியா – ஹமாஸ் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என நிபந்தனை!

0
7

ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என்ற நிபந்தனையுடன்  ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் எதிர்கால அமர்வில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இதனை உறுதி செய்துள்ளதுடன் இரண்டு தேசக்கொள்கை மத்திய கிழக்கில் வன்முறையை நிறுத்துவதற்கு மனித குலத்திற்கான சிறந்த நம்பிக்கை என  தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன இஸ்ரேலிய தேசங்களை உருவாக்குவதற்கான 181வது தீர்மானத்திற்கு ஆதரவாக முதலில் கையை உயர்த்திய நாடு அவுஸ்திரேலியா என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

77வருடங்களின் பின்னர் இந்த தீர்மானம் குறித்து சில தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக உலகத்தினால் இனிமேலும் காத்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவகளைவு,பொதுத்தேர்தல்களை நடத்துதல்,இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்தல் போன்ற வாக்குறுதிகளை பாலஸ்தீன அதிகார சபை வழங்கியுள்ளதாக  அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள யூதசமூகத்தினர் உடனடியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த முடிவை கண்டித்துள்ளனர்,பாலியல் வன்முறை மற்றும்  கொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு தொழில்கட்சி அரசாங்கம் வெகுமதி வழங்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.