மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான வனஜா என்ற பெண் நேற்று உயிரிழந்தார்.குறித்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வைத்தியசாலை தரப்பினரின் கவனக் குறைவு காரணமாகவே குறித்த பெண்ணும் சிசுவும் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இதனால் வைத்தியசாலையில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.அத்துடன் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலையில் எதிர்ப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் மாகாண சுகாதார அமைச்சின் ஊடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதேநேரம் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிந்துஜா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த விடயம் மன்றுரைக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி இரண்டு வார காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.