பிரதான விடயங்களில் கவனம் செலுத்துங்கள்?

0
230

தேசிய இனப்பிரச்னை தொடர்பிலான பேச்சுகள் வெற்றியளிக்குமா அல்லது இல்லையா என்பதற்கப்பால் இவ்வாறானதொரு சூழலில் மிகுந்த பொறுப்புணர்வுடனும், தந்திரோபாயத்துடனும் தமிழ்த் தேசிய கட்சிகள் நடந்துகொள்ள வேண்டும்.
பேச்சில் பேரம் பேசுவதற்கான பலமான நிலையில் தமிழ் கட்சிகள் இல்லை.
ஆகக்குறைந்தது, அதற்கான கூட்டு வேலைத் திட்டம்கூட இல்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில் இன்றைய சூழலில் தேர்தலை முன்வைத்து தேவையற்ற வகையில் விவாதங்களை உருவாக்குவது பொருத்தமானதொரு விடயமல்ல.
அரசியல் கட்சிகள் என்றால் தேர்தல் நலனிருக்கும்.
தேர்தல்களின்போது தாங்கள் முன்னணி வகிக்க வேண்டுமென்று ஒவ்வொரு கட்சிகளும் – அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் – தாங்களே மீளவும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வரவேண்டுமென்று எண்ணுவதும் இயல்பான விடயங்கள்தான்.
ஆனால், தேர்தல் கணக்குகள் தமிழ் மக்களின் அடிப்படையான விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது.
ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சு தொடர்பில் பேசிக் கொண்டிருக்கும் போது, கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசு கட்சி, உள்ளூராட்சி மன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்வதாக அறிவித்திருக்கின்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையிலுள்ள சிக்கல்களே இதற்குக் காரணமென்று தமிழரசுக் கட்சி கூறுகின்றது.
ஆனால், மறுபுறம் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைக்க முயற்சிப்பதான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
தென்னிலங்கை அரசியல் குழப்பமடைந்திருக்கின்ற சூழலில் தமிழ்த் தேசிய கட்சிகள் தேர்தலை முன்வைத்து தங்களின் பிளவு நிலையை காண்பிக்கக்கூடாது.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது.
பொருளாதார நெருக்கடி இலங்கைத் தீவின் அரசியல் கட்டமைப்பையும் பெரியளவில் பாதித்திருக்கின்றது.
பெருமளவில் சிதைத்துவிட்ட தெனலாம்.
இவ்வாறானதொரு சூழலில் முடிந்தவரையில் தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
எவ்வாறு பலரையும் ஒரு பொது வேலைத் திட்டத்துக்குள் கொண்டுவர முடியுமென்று சிந்திக்க வேண்டும்.
சிறிய, சிறிய கட்சிகளாக வாக்குகளை பிரித்தாளுவதில் எவ்வித பயனுமில்லை.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இதுவரையில் அடையாளமற்றிருந்த பலர் கட்சிகள் என்னும் பெயரிலும் சுயேச்சைக் குழுக்களாகவும் களமிறங்க
முற்படுகின்றனர்.
இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகளே பிரதான காரணமாகும்.
தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களுக்குள் நேர்த்தியான கட்டமைப்பையும் வேலைத்திட்டத்தையும் பேணியிருந்தால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது.
தமிழ்த் தேசியம் என்பது அடிப்படையில் மக்களை திரட்சியாக்குவதாக இருக்க வேண்டும்.
ஆனால், மக்களை சிதறடிக்கவே தேசியம் அதிகம் பயன்படுவதாக தெரிகின்றது.
கூட்டமைப்போடு முரண்பாடுள்ளவர்கள், கட்சிகளிலுள்ள தனிநபர்களோடு முரண்பாடுள்ளவர்கள் என்று ஒவ்வொரு வரும் தங்களை தனியான கட்சியாக முன்னிலைப்படுத்திக் கொள்கின்றனர்.
இருக்கின்ற கட்சிகள் போதாதென்று, க. வே. பாலகுமாரனால் 1990களில் கலைக்கப்பட்ட ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவர்களில் ஒரு குழுவினரும்
கிழக்கு மாகாணத்தில் போட்டியிடவுள்ளனர்.
ஒரு சிறிய தேசிய இனத்துக்கு எத்தனை கட்சிகள்? 2009இல், விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்சியடைந்தபோது, ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமேயிருந்தது.
அதற்கு வெளியில் அரச ஆதரவு கட்சிகள் இருந்தன.
ஆனால், இன்று? இப்போது ஒன்பது கட்சிக் கூட்டு, பதினொரு கட்சிக் கூட்டென்று விவாதிக்கும் அளவுக்கு கட்சிகள் பல்கி பெருகியிருக்கின்றன.
இதற்கு சம்பந்தனின் தலைமையும் ஒரு முதன்மையான காரணமாகும்.
ஒரு மூத்த தலைவராக ஏனைய கட்சியினரை அரவணைத்து சென்றிருந்தால் பல கட்சிகள் உருவாகியிருக்காது.
கூட்டமைப்பின் வீழ்ச்சியும், இயலாமையுமே தமிழ்த் தேசிய அரசியல் சிதைவுற்றமைக்கு காரணம்.
இந்த நிலைமை இப்போதும் தொடர்வதுதான் துரதிர்ஷ்டவசமானது.