பிரான்ஸில் இருந்து தங்கத்தை கடத்தி பயணி கைது

0
149

ஐந்து கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்தி வந்த இலங்கை விமான பயணி ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகளால், இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாலபே பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான இந்த நபர், சுமார் 10 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் தொழில் புரிந்து வந்துள்ளதுடன் நாடு திரும்பியுள்ளார். பாரீஸ் நகரில் இருந்து இன்று காலை 5.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யு.எல்.564 என்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் இந்த நபர் தங்கத்தை கடத்தி வந்துள்ளார். விமான நிலையத்தில் பரிசோதனைகள் எதுவுமின்றி வெளியேறும் கிறீன் செனல் வழியாக வெளியேற முயற்சித்த போதே சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து 2.414 கிலோ கிராம் தங்க ஆபணரங்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்னர். அவற்றில் 586.8 கிராம் எடை கொண்ட தங்கச்சங்கிலியை சந்தேக நபர் கழுத்தில் அணிருந்தார் எனவும் ஏனைய தங்க ஆபரணங்கள் அவரது பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.