இறுதிப் போரில் பங்குபற்றிய இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் உள்ளடங்கலாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோர் மீது பிரித்தானிய அரசு தடை விதித்துள்ளது. இவர்களும் இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பிரித்தானியாவுக்குள் நுழைய முடியாது.
இவர்களில் ஒருவரான படைகளின் முன்னாள் பிரதானியான ஜெனரல் சவேந்திர சில்வாமீது ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையிலேயே பிரித்தானியா தற்போது தடை விதித்திருக்கிறது. இவ்வாறான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம்கூட எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம். இவ்வாறு தடை விதிக்கப்பட்ட அனைவருமே முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய
ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள். இதில், குறிப்பாக இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திரசில்வா, ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்த காலத்திலும் பதவியில் இருந்தவர்.
எதிர்காலத்தில் அரசியல் பிரவேசம் செய்யும் நோக்குடன் செயல்பட்டு வருபவர். அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்தில் சவேந் திர சில்வாமீதான தடையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருந்தது. ஆனால், சவேந்திர சில்வா பதவியில் இருக்கும் வரையில் அமைதியாக இருந்துவிட்டு, அவர் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் பிரித்தானியா தடையை அறிவித்திருக்கிறது.
இது ஒரு வகையில் கோடம்பாக்க தமிழ் படங்களில் வரும் பொலிஸார் போன்றது. அதாவது, எல்லாம் நடந்து முடிந்த பின்னர் பொலிஸார் அவ்விடத்துக்கு வந்து விசாரிப்பார்கள். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும். இவ்வாறான மேற்குலக தடைகளால் புலம்பெயர் சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் மகிழ்ச்சியடையலாம் – தமிழ் அரசு கட்சியின் அரசியல்வாதிகளும் மகிழ்ச்சியை வெளிக்காட்டலாம் – அதற்குமப்பால் தங்களுடைய இராஜதந்திர நடவடிக்கைகளால்தான் இவ்வாறான தடை உத்தரவுகளை மேற்குலகம் வழங்குவதாகவும் அவர்கள் பொய்யாக பிரசாரம் செய்யலாம். ஆனால், உண்மையில் இவர்களுடைய அரசியல் நடவடிக் கைகளுக்கும் இவ்வாறான தடை உத்தரவுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இதிலுள்ள ஆச்சரியம் என்னவென்றால், இறுதி யுத்தத்தின்போது 58ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த சவேந்திர சில்வா பின்னர், மகிந்த ராஜபக்ஷ காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர உபவதிவிடப் பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் இவ்வாறானவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான செங்கம்பளத்தை விரித்துவிட்டு, அவர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் அவர்கள்மீது தடை உத்தரவுகளை பிறப்பிப்பதானது – இவ்வாறானவர்கள் தென்னிலங்கையில் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் கதாநாயகர்களாக கொண் டாடப்படுவதற்கான சூழலையே கனியச் செய்கிறது. அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதிலும் இவ்வாறான தடைகள் எவ்வித செல்வாக்கையும் செலுத்தவில்லை.
ஏனெனில், இது வரையில் இலங்கைமீதான இவ்வாறான அழுத்தங்களால் அரசாங்கம் கீழிறங்கி வரவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பிரித்தானிய தீர்மானத்தை எதிர்த்திருப்பதுடன், இது ஒருதலைப்பட்சமான முடிவு என்று தெரிவித்திருக்கிறது. கடந்த பதினைந்து வருடங்களாக இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் அனைத்துமே ஒரு விடயத்தில் கொள்கைரீதியான உடன்பாட்டையே கொண்டிருந்தன – கொண்டிருக்கின்றன என்பதையே தேசிய மக்கள் சக்தியின் கருத்து வெளிப்படுத்துகிறது. மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷமீதும் கனடா தடை விதித்திருக்கிறது. அதனால் என்ன நடந்தது? அவர்கள் தனிப்பட்ட ரீதியில் கனடாவுக்கு செல்ல முடியாததைத் தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வில் இவ்வாறான தடைகள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறன? மாறாக, தென்னிலங்கையில் அவர்கள் தொடர்ந்தும் கதாநாயகர்களாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.