“பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி வாய்ப்புகளை விரிவாக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல் நடைமுறைக்கு வரும்” – பிரதமர்!

0
10

பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை  இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதும்  கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று பேராயர் மேன்மைதங்கிய கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்களுடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த முழுமையான விளக்கத்தை முன்வைத்தனர்.

எல்லா பிள்ளைகளுக்கும் உயர்தரமாகக் கருதப்படும் வேலைகளில் ஈடுபட வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதுடன், கடற்றொழில், மின் கைத்தொழில் துறை மற்றும் வாகன பழுதுபார்ப்பு போன்ற தொழிற்கல்வித் துறைகளின்  பெறுமதியை விளக்கி, அத்துறைகளில் நிபுணர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை பாடசாலைக்குள்ளேயே எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் பாடத்துறை நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம், அந்த தேர்வு செயல்முறையை முறைப்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த தரமான கல்வியை வழங்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை ஆயர் பேரவையின் தலைவர் மேன்மை தங்கிய ஆயர் ஹரோல்ட் அந்தோணி உள்ளிட்ட ஆயர்கள் கலந்துகொண்டனர்.