புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக வரைவொன்றை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் குழு
அப்பணியை நிறைவு செய்துள்ளதாத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு,
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைபினை தயாரித்து அமைச்சரவைக்கு கையளிப்பதற்காக
நியமிக்கப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 19ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக நியமிக்கப்பட்ட இந்தக்குழுவில்
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைவராக உள்ளதோடு, ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன,
ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஜனாதிபதி சட்டத்தரணி நசீமா கமுர்தீன்,
கலாநிதி சர்வேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி சமந்த ரத்வத்த, ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த செனவிரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி ஜி.எச்.பீரிஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் ஒருவருடத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் தற்போது
இக்குழுவானது தனது வரைவினை இறுதி செய்துள்ளது.
இந்த வரைபில் அரசியல் கட்சிகளினால் முன்னொழியப்பட்ட விடயங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின்
கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
வரைவின் சில உள்ளடக்கங்கள் தொடர்பில் வரைவைத் தயாரிக்கும் உறுப்பினர்கள் மத்தியில் இணக்கப்பாடு காணப்படாதபோதும்
அவையும் உள்ளீர்க்கப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் வரைவினை நிபுணர்கள் குழு வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இதுவரையில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நேர ஒதுக்கீடுகள் எவையும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஏப்ரலில் புதிய அரசியலமைப்புக்கான வரைவு நாடாளுமன்றில்
சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.