28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புதிய அரசியல் பாய்ச்சலுக்கான சாத்தியம்!

கோட்டாபயவின் நண்பர் திலித் ஜயவீர தனது பிரசார கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருக்கின்றார். ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் நிகழ்வில் பங்கு கொண்டிருக்கின்றனர். இதேபோன்று, பிரமாண்ட மான கூட்டங்கள் இனிவரும் நாட்களில் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறலாம். தங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு என்பதைக் காண்பிக்கும் நோக்கில் அரச ஆதரவு கட்சிகள் பெரு மெடுப்பிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். தேர்தல்கால திரு விழாக்கள் போன்றவைதான் இவைகள் அனைத்தும். தமிழ் மக்களின் வாக்குகள் தங்களின் வெற்றிக்குத் தேவை என்பது முன்னர் எப்போதும் இல்லாதவாறான தேவையாக மாறியிருக்கின்றது. எனவே, அனைத்து தென்னிலங்கை வேட்பாளர்களும் தமிழ் மக்கள் மத்தியில் முகாமிடுவார்கள்.

இவ்வாறானதோர் அரசியல் சூழலில் தமிழ் மக்கள் என்ன செய்யப் போகின்றனர்? வழமைபோல் வாக்களித்துவிட்டு ஏமாற்றி விட்டார்கள் என்று கூறப் போகின்றனரா அல்லது புதுவிதி ஒன்றை எழுதப் போகின்றனரா?

அவ்வாறு புதுவிதி ஒன்றை எழுதப் போகின் றனர் என்றால் – அவர்களுக்கு முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவு தமிழ்ப் பொது வேட்பாளர் மட்டும்தான். இதனைப் புரிந்துகொண்டி ருக்கும் அரசியல் கட்சிகள் கொள்கை அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன. அவ்வாறான கட்சிக ளும் மக்கள் அமைப்புகளும் இணைந்ததே தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாகும். தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது பாரம்பரிய தமிழ்த் தேசிய அரசியல் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறானது.

பாரம்பரிய தமிழ்த் தேசிய அணுகுமுறை என்பது பாராளுமன்றத் தேர்தல்களின்போது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை முன்வைப்பதும் ஆனால், ஜனாதிபதித் தேர்தல் என்று வருகின்றபோது, எவ்வித உடன்பாடுகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதும்தான் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடாக இருந்திருக்கின்றது.

இது செல்வநாயகம் காலம் தொடக்கம் இன்றுவரையில் இதுதான் நிலைமை. தமிழ் பொது வேட்பாளர் என்பது அவ்வாறான பழைய அணுகுமுறையில் ஓர் உடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. இது, அடிப்படையில் ஒரு பரிசோதனை முயற்சிதான். ஆனால், தமிழ் மக்கள் விழிப்புற்றால் இது இலங்கைத் தீவின் அரசியலில் ஒரு பெரும் உடைவை ஏற்படுத் தும் ஆற்றல் கொண்டது.

தமிழ் மக்கள் என்ன செய்யப் போகின்றனர் என்பதில்தான் இந்த முயற்சியின் வெற்றி தங்கியிருக்கின்றது. செய்தி சரியான வகையில் தமிழ் மக்களை சென்றடைந்தால் தமிழ்ப் பொது வேட்பாளர் கடந்த பதினைந்து வருடகால தமிழர் அரசியலில் ஒரு புதிய பாய்ச்சலாக அமையும். ஒருவேளை, போதியளவு மக்கள் மத்தியில் விடயங்கள் கொண்டு செல்லப்பட்டபோதும் தமிழ் மக்கள் கணிசமாக இதிலிருந்து விலகினால் அதிலிருந்தும் தமிழ்த் தேசிய தரப்புகள் பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.

எவ்வாறான முடிவு வந்தாலும் அனைத்துமே தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகளுக்கான படிப்பினைதான். தேர்தல் கால வாக்குறுதிகளை நம்பிச் செயல்படும் ஒரு தலைமுறையாக தமிழ் மக்கள் இருக்கப் போகின்றனரா அல்லது புதிதாக சிந்தித்து தங்களுக்காக செயல்படும் ஓர் அரசியல் சமூகமாக தமிழினம் இருக்கப் போகின்றதா என்னும் கேள்விக்கான பதில்தான் – தமிழ்ப் பொது வேட்பாளர். தங்களுக்கான அரசியலை புரிந்து கொண்டு செயலாற்றும் திறன் கொண்ட ஒரு சமூகத்தால் மட்டுமே நிமிர்ந்தெழ முடியும் –

அவ்வாறானதோர் அரசியல் சமூகமாக தமிழ் மக்கள் இருக்கப் போகின்றனரா அல்லது இல்லையா என்பதற்கான பதிலாகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் அமையும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles