இஸ்ரேலில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில், பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தோல்வி அடைந்தார்.
மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேல் நாட்டில், கடந்த மார்ச்சில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள, 120 தொகுதிகளில், நெதன்யாகுவின், லிக்யுட் கட்சி, 30 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு தேவையான, 61 இடங்களை எந்த கட்சியும் பெறாததால், புதிய அரசு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, நெதன்யாகு, 19 இடங்களை கைப்பற்றிய, யெஷ் அடிட் கட்சியுடன் கூட்டணி அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டார்.
மேலும், முன்னாள் ராணுவ அமைச்சர், நப்தாலி பென்னட் தலைமையிலான, யமினா கட்சியின், ஏழு எம்.பி.,க்கள் ஆதரவையும் கோரினார்.அத்துடன் மதவாத கட்சிகளின் ஆதரவை பெற்று, ஆட்சி அமைக்க திட்டமிட்டார்.இது தொடர்பாக, ஒரு மாதத்திற்கு மேலாக பேச்சு நடந்தது.’சுழற்சி முறையில், பிரதமர் பதவி வகிக்கலாம்’ என, நெதன்யாகு இறங்கி வந்த போதிலும், கூட்டணி பேச்சு தோல்வி அடைந்தது. இதற்கிடையே, புதிய அரசு அமைக்க, நெதன்யாகுவிற்கு, இஸ்ரேல் ஜனாதிபதி, ரூவன் ரெவ்லின் அளித்த, ‘கெடு’ நேற்று முன்தினம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, ‘புதிய அரசு அமைக்க முடியவில்லை’ என, நெதன்யாகு, ரூவன் ரெவ்லினிடம் தெரிவித்தார்.இதனால், இஸ்ரேலில், ஐந்தாவது முறையாக மீண்டும் பொதுத் தேர்தல் நடத்த, ரூவன் ரெவ்லின் உத்தரவிடுவாரா அல்லது இதர எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிப்பாரா என, தெரியவில்லை.கடந்த, இரு ஆண்டுகளில், இஸ்ரேலில், நான்கு முறை பொதுத் தேர்தல் நடைபெற்ற போதிலும், ஒன்றில் கூட, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை.