பாராளுமன்றத் தேர்தலில் இந்த தடவை வாக்களிப்பு வீதம் கணிசமானளவுக்கு குறைந்துவிட்டது. இரு மாதங்களுக்கும் குறைவான காலத்துக்குள் இரு தேசிய தேர்தல்களை சந்திப்பதில் அரசியல் கட்சிகளுக்கு மாத்திரமல்ல மக்களுக்கும் ஏற்பட்ட சலிப்பே அதற்கு பிரதான காரணம் எனலாம். ஜனாதிபதித் தேர்தலை விடவும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் கூடுதலான அளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்க ஏற்கனவே நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால், வாக்களிப்பு வீதம் அவரின் நம்பிக்கைக்கு மாறாகவே அமைந்துவிட்டது. இலங்கையில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 ஆகும். செப்ரெம்பர் 21 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 36 இலட்சத்து 19 ஆயிரத்து 916 (79.46 சதவீதம் ). வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்து 20 ஆயிரத்து 438. இது மொத்த வாக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும் . பாராளுமன்றத் தேர்தலில் நேற்றைய தினம் வாக்களிப்பு 60 – 65 சதவீதமாக இருந்ததாக வாக்களிப்பு முடிவடைந்த பிறகு தேர்தல் அவதானிகள் கூறினார்கள். இந்த ஆசிரிய தலையங்கம் எழுதப் பட்டுக் கொண்டிருந்த தருணம் வரை வாக்களிப்பு வீதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்து வெளியாகவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காதவர்களையும் விட கூடுதலானவர்கள் நேற்றைய தினம் வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. எது எவ்வாறிருந்தாலும், புதிதாக தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்துக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. ஜனாதிபதியாக திஸநாயக்க பதவியேற்றதை அடுத்து நாட்டின் ஆட்சியதிகாரம் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவபடுத்தி வந்த அரசியல் தலைவர்களிடமிருந்து அந்த வர்க்கத்துக்கு வெளியில் சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்ட ஓர் அரசியல்வாதியிடம் வந்துசேர்ந்தது.
புதிய அரசியல் கலாசாரத்தையும் முறைமை மாற்றத்தையும் செய்யக்கூடியவராக பெரும்பான்மையான வாக்காளர்களால் அடையாளம் காணப்பட்டு, ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட திஸநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் வசதியான பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி அரசாங்கத்தை அமைக்கப்போகிறது. புதிய பாராளுமன்றம் செப்ரெம்பரில் நடைபெற்ற அதிகார மாற்றத்தை பூர்த்தி செய்வதாக அமைகிறது. அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே. வி. பி.) சுமார் 60 வருடங்களுக்கு முன்னரான அதன் பிறப்பில் தொடங்கிய அரசியல் அதிகாரத்தை நோக்கிய பயணம் இரு ஆயுதக் கிளர்ச்சிகளின் பயங்கரமான அனுபவங்களைக் கடந்து ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி ஒரு முழு வட்டத்தை பூர்த்தி செய்திருக்கிறது. இந்த உருநிலை மாற்றம் ஜே. வி. பி. தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமல்ல, இலங்கைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.