-அலசுவது இராஜதந்திரி-
ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ளதன் பின்னணியில் தமிழ் தேசிய பேரவை என்ற புதிய அமைப்பை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்து உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் அவ்வமைப்பு சகல தமிழ் கட்சிகளும் இணைந்த, மூன்றாவது ஓர் அமைப்பாகவே உதயமாகுமெனக்கருதமுடியும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியே தமிழ் அரசியல் அரங்கில் உருவான முதலாவது இணைப்பாக விளங்கியிருந்தது.
1972ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் இணைப்பில் தமிழர் கூட்டணி (பின்னர் தமிழர் விடுதலைக் கூூட்டணி) உருவாக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அமரர் எஸ்.தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ தொ கா) கட்சியும் தமிழர் விடுதலைக்கூட்டணியில் சேர்வதற்கு முன்வந்திருந்தது.
ஆயினும், பின்னர் மலையக மக்களின் அரசியல், சமூக பிரச்னைகள் வேறானவை என்று கூறி, இ தொ கா வை தொண்டாமன் தமிழர் விடுதலைக்கூட்டணியிலிருந்து விலக்கிக் கொண்டார்.
அபார வெற்றி
1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பிரகடனமாக தனி நாட்டுக்கோரிக்கையை முன்னிறுத்தி 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கில் அபார வெற்றி பெற்று அன்று பிரதான எதிர்க்கட்சியாகவும் பாராளுமன்றில் தமிழர் விடுதலைக்கூட்டணி இடம் பிடித்திருந்தது.
ஆனால் காலப்போக்கில் தமிழ் தீவரவாதம் விரிவடைய ஆரம்பித்ததையடுத்து, தமிழர் விடுதலைக்கூட்டணி அரசியலில் தனது முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்ததோடு, நாளடைவில் அனல் பறந்த தமிழ் தீவரவாதத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அ. அமிர்தலிங்கம் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் இரையாகவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டிருந்தது.
தமிழ் தீவரவாத அமைப்புகளான தமிழீழ விடுதலைப்புலிகளும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ பி ஆர் எல் எவ்), தமிழ் ஈழ விடுதலை கழகம் (ரெலோ) ஈரோஸ் அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஈழம் தேசிய விடுதலை முன்னணி (ஈ என் எல் எவ்) என்ற அமைப்பு இந்தியாவில் உருவாகியிருந்தது.
ஈழம் தேசிய விடுதலை முன்னணி
இந்த அமைப்பின் உருவாக்கம் வடக்கு – கிழக்கு மக்களிடையே தீவிரவாத அமைப்புகளின் ஒற்றுமை தொடர்பில் நிறையவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது.
ஆனால், ஈ என் எல் எவ் ஆரம்பமான சொற்ப காலத்திலேயே பிளவுபட்டு விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னோடு கூட்டுச்சேர்ந்த ஏனைய அமைப்புகளின் தலைவர்களை தொலைத்துக்கட்டியதுடன், ஆயுத போராட்டத்தில் ஓர் ஏகபோக நிலையையும் கொண்டிருந்தது.
நலிவுற்ற நிலையில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியே நாளடைவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு நோர்வேயின் அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தையையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிவிட்டிருந்ததோடு , விடுதலைப்புலிகளது அரசியல் நடவடிக்கைகளின் ஓரங்கமாக இருக்குமெனவும் இக்கூட்டமைப்பு எதிர்பார்க்கப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வடக்கு-கிழக்கில் காணப்பட்ட அபாரமான அரசியல் செல்வாக்கு போன்றே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அமோக ஆதரவு கிடைத்திருந்தது.
2015ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதோடு, பிரதான எதிர்க்கட்சியாக இரண்டாவது தடவையாகவும் தமிழ்அரசியல்தரப்பு பாராளுமன்றத்தில் இடம்பிடிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அபாரமான அரசியல் செல்வாக்கு வழியமைத்திருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவு
ஆயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பில்கூட பிளவுகள் நாளடைவில் ஏற்பட்டு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியதோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வடமாகாண முதலமைச்சராக்கப்பட்ட சி. வி. விக்னேஸ்வரனும் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியிருந்தார்.
தற்சமயம் மீளவும் பத்து தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பொன்று தமிழ் தேசிய பேரவையென்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியாகவும் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பாகவும் இணைப்புகள் ஏற்பட்டு தற்போது சிவில் சமூகஅமைப்புகளோடு ஒன்றிணைந்த வகையில் தமிழ் தேசிய பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இப்புதிய பேரவையின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை.
தமிழ் தேசிய பேரவையின் உருவாக்கம் என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதோடு, மனிதாபிமானப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு எவ்வளவு தூரம் மற்றும் எவ்வளவு காலம் ஒற்றுமையாக இருந்து குரல் கொடுக்குமென்பது சந்தேகமாகவே இருக்கின்றது.
ஏனெனில் தமிழ் மிதவாத அரசியல் வாதிகளோ அல்லது ஆயுதப்போராட்ட அமைப்புக்களோ ஒற்றுமையாக இருந்து எதனையும் ஆக்கபூர்வமாக ஒருபோதும் சாதிக்காமல் இருந்ததே வரலாறு.
இந்நிலையில், தமிழ் தேசியப்பேரவையென்பது தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதைவிட, அப்பேரவையில் அங்கம் பெறுகின்ற அரசியல் கட்சிகளின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதையே முக்கியநோக்கமாக கொண்டுள்ளதென்றே கருத வேண்டியுள்ளது.