ஐசிசியின் புதிய வருடாந்த தரவரிசையின் பிரகாரம் ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணி தரவரிசையில் அவுஸ்திரேலியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றிகொண்டு சம்பியனான அவுஸ்திரேலியா தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கனவே முதல் இடத்தில் இருந்துவந்த இந்தியா 2ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.ஆடவர் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையை ஐசிசி கடந்த வெள்ளிக்கிழமை புதுப்பித்தது.
லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெட் கமின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி வெற்றிகொண்டு உலக டெஸ்ட் சம்பியன் பட்டத்தை சூடியது. இதன் பலனாகவே புதிய தரவரிசைப்படுத்தலில் அவுஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவின் மதிப்பீட்டுப் புள்ளிகள் 124ஆக உயர்ந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இந்தியா 120 மதிப்பிட்டுப் புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
இங்கிலாந்து 105 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் இந்தியாவைவிட 15 புள்ளிகள் வித்தியாசத்தில் 3ஆம் இடத்தில் உள்ளது.தென் ஆபிரிக்கா (103), நியூசிலாந்து (96), பாகிஸ்தான் (89), இலங்கை (83), மேற்கிந்திய தீவுகள் (82), பங்களாதேஷ் (53) ஆகிய அணிகள் டெஸ்ட் தரவரிசையில் முறையே 4ஆம் இடத்திலிருந்து 9ஆம் இடம்வரை வகிக்கின்றன.
2021ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2023 மே மாதம் வரையில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளினதும் முடிவுகள் 50 சதவீதமாக கருத்தில் கொள்ளப்படும்.அதன் பின்னர் அடுத்த 12 மாதங்களில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் உட்பட ஏனைய போட்டிகளின் முடிவுகள் சேர்க்கப்பட்டு 100 சதவீதமாக கருத்தில் கொள்ளப்படும்.