மட்டக்களப்பு (Batticaloa) – கல்முனை பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் தனியார் எரிபொருள் பவுசரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவமானது, இன்று அதிகாலை 2.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொந்தமான குறித்த எரிபொருள் பவுசரானது, கல்முனையில் இருந்து திருகோணமலைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக சென்ற வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரதியின் கவனயீனத்தால் வீதியை விட்டு விலகிய பவுசர், பேருந்து தரிப்பு நிலையத்தில் மோதியுள்ளதோடு அருகில் இருந்த மின்சார தூண், வீடொன்றின் மதில் மற்றும் நுழைவாயில் ஆகியவற்றினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் சுமார் 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்து பிரிவு பொலிஸார், வீதி போக்குவரத்தை சீராக்கியுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
