கனடிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள்மீதான தடையை மீளவும் புதுப்பித்திருக்கின்றது. 2006ஆம் ஆண்டு கனடா விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது. ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தடையை மறுபரிசீலனை செய்து மீளவும் உறுதிப்படுத்துகின்றது.
நாடுகளின் வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்கப் போராடுவதாகவும் தொடர்ந்து சத்தம் போட்டால் அது சாத்தியம் என்றும் இப்போதும் நம்பிக்கொண்டிருப்பவர்கள் இருக்கின்றனர். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மத்தியில் தங்களின் ‘லொபி’யால் கனடாவின் வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க முடியுமென்று நம்பிக்கொண்டிருப்போர் இருக்கின்றனர்.
கனடாவில் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் தலையீடு எத்தகையது? தங்களின் தலையிடும் ஆற்றலை அவர்கள் எவ்வாறு புரிந்து வைத்திருக்கின்றனர்? எல்லாவற்றையும் அறிவுக் கண்கொண்டு நோக்காமல் வெறும் உணர்வின் வழியாக அணுகுவதன் விளைவாக தமிழ்த் தேசிய அரசியல் சூழல் தொடர்ந்தும் அறிவுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சமூக மாகவே காட்சியளிக்கின்றது.
உண்மையில், ஒப்பீட்டு அடிப்படையில் தமிழ் புலம்பெயர் சமூகம்தான் அரசியலை அதிகம் அறிவுபூர்வமாக அணுகுபவர்களாக இருந்திருக்க வேண்டும். அரசியலை அறிவுபூர்வமாக அணுகுவதில் தாயகத்துக்கு அவர்கள் வழிகாட்டியிருக்க வேண்டும். ஆனால், நிலைமையோ தலைகீழாக இருக்கின்றது.
ஒப்பீட்டு அடிப்படையில் அறிவுசார் மேற்குலகத் தோடு அதிகம் ஊடாடுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கும் தமிழ் புலம்பெயர் சமூகம் தொடர்ந்தும் கற்பனைகளில் மூழ்கிக் கிடக்கும் தரப்பாகவே இருக்கின்றது. அவர்களின் புரிதல் தவறானது என்பதை அவ்வப்போது மேற்குலகம் நிரூபித்தாலும்கூட தமிழ் புலம்பெயர் சமூகம் இதன் தாற்பரியத்தை புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேற்குலகம் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்திருக்கின்றது.
புலம்பெயர் அமைப்புகள் தங்களை ஆற்றலுள்ளவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தபோதுதான் 2006இல் கனடா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது. கனடாவில் ஈழத் தமிழர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதாக எண்ணிக் கொண்டிருக்கும்போதுதான் கனடா புலிகளைத் தடை செய்தது. கனடிய பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு குரல் இருந்த போதிலும்கூட தமிழர்களால் எதனையும் செய்ய முடியவில்லை. இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு புலம்பெயர் சமூகம் புதிதாக சிந்திக்க முற்படவில்லை.
இப்போதும் பழைய கற்பனாவாதத்துக்குள் மட்டுமே தன்னை சுருக்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ் புலம்பெயர் சமூகம் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, கனடாவில் சுமார் பதினான்கு இலட்சம் இந்திய புலம்பெயர் சமூகத்தினர் கனடாவில் வாழ்கின்றனர். கனடாவில் சீக்கிய தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த இடத்தில் இந்திய புலம்பெயர் சமூகத்தால் என்ன செய்ய முடிந்தது? பதினான்கு இலட்சம் இந்திய புலம்பெயர் சமூகத்தால் கனடாவின் வெளிவிவகார கொள்கையில் தலையீடு செய்ய முடியாதபோது மூன்று இலட்சம் ஈழத்தமிழ் புலம்பெயர் சமூகத்தால் கனடிய வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க முடியுமென்று எண்ணுவது எந்த அடிப்படையில் சரியானது? இந்த விடயத்தை அறிவுபூர்வமாக அணுகினால் மட்டுமே புலம்பெயர் சமூகத்தின் ஆற்றல் என்ன – அதனால் தாயகத்திலுள்ள மக்களுக்கு என்ன செய்ய முடியும் – என்று தீர்மானிக்க முடியும்.
செய்ய முடியாதவற்றை செய்ய முடியுமென்று நம்பிக்கொண்டிருப்போரால் ஓர் இனத்துக்காக எதனையும் செய்ய முடியாது. கனடா ஓர் அரசு. உள்நாட்டில் வாக்குகளை திரட்டுவதற்காக கனடிய அரசியல்வாதிகள் பேசுவதை கனடாவின் கொள்கை நிலைப்பாடாக கருதும் தவறை புலம்பெயர் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.