பெண் ஒருவரின் சடலத்தை மீட்க சென்ற இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

0
150
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் மலை மேல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை கீழே இறக்கச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவர் மலையின் மேல் பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக நேற்றுஉயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிறேட்வெஸ்டன் வனப்பகுதியில் நேற்று முன்தினம்மாலை கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் சடலத்தை மீட்பதற்காக சென்றிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் திடீர் சுகவீனமடைந்ததையடுத்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.நுவரெலியா இராணுவ முகாமில் கடமையாற்றிய அனுராதபுரம் கலென்பிடுனுவெவ தூதுவெவ எல்லும்கசாய பிரதேசத்தை சேர்ந்த சந்துன் குமார ஹேரத் என்ற இராணுவ கோப்ரல் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் நேற்று காலை முதல் மிகுந்த பிரயத்தனத்துடன் மலை நடுப்பகுதியில் பாரிய கற்பாறை நடுவே இறந்து கிடந்த யுவதியின் சடலத்தை நேற்று மாலை மலையிலிருந்து மீட்டு கீழே கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.மலையேறச் செல்பவர்களைத் தவிர வேறு எவரும் மலை உச்சிக்கு செல்வதில்லை எனவும், வெளிப்பிரதேசத்திலிருந்து வந்த யுவதியின் சடலமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த யுவதியின் சடலம் இனங்காணப்படாத நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்த இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.