பெரிய அளவிலான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளாவிட்டால் அந்தாட்டிக்காவின் 97 சதவீதமான நிலம் சார்ந்த உரியினங்களின் எண்ணிக்கை 2100 ஆம் ஆண்டில் வெகுவாக குறைந்துவிடும். அத்துடன், எம்பெரர் பென்குயின் முற்றாக அழிந்து போகும் அபாயம் உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குயீன்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட்டால் அந்தாட்டிக்காவில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கலாம் எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான தொகையை ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து செலவு செய்து வந்தால் அந்தாட்டடிகாவில் உள்ள 84வீத நிலவாழ் பறவைகள், உயிரினங்கள் மற்றும் தாவர குழுக்கள் காப்பாற்றப்படும். பருவநிலை மாற்றம் அந்தாட்டிக்காவில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
பருவநிலை மாற்றத்தை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அந்தாட்டிக்காவில் உள்ள உயிரினங்கள் மிகவும் குளிரான, அதிக காற்று போன்றவற்றைத் தாங்கி வாழ்வதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. உரிய கவனம் கொடுக்கப்படாவிட்டால் அந்தாட்டிக்காவில் உள்ள பென்குயின் உட்பட பல உயிரினங்கள் அழிந்து போகும் அபாயமுள்ளது.