பெற்றோலிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக பெற்றோலிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘எந்தவொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கமும் அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறுவது மற்றும் சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உடனடியாக சட்ட மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோலிய சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று சுகயீன விடுமுறையில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தியுள்ளன. பெற்றோலிய தொழிற்துறையை தாராளமயமாக்குவதற்கு வழி வகுக்கும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். இந்தச் சட்டமூலம் இலங்கைக்கான புதிய உலகளாவிய சில்லறை விற்பனையாளர்களை எளிதாக்கும். முதலீடுகளை ஊக்குவிக்கும் மற்றும் சேவையை ஒழுங்குபடுத்துவதற்கு ஆற்றல் வழங்கல் குழுவை அமைக்கும்’ என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.