பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு?

0
136

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு தொடர்பில், எதிர்வரும் 13ஆம் திகதி கட்சிகள் சந்திக்கவுள்ளன.
இந்த சந்திப்பின் பின்னர்தான், சந்திப்பின் நோக்கம் மற்றும் சந்திப்பின் எதிர்காலம் தொடர்பில் நாம் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும்.
தமிழர் ஒரு தரப்பென்னும் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.
அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கான ஒரு ஒன்றுகூடலாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த பின்னணியில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வை காணும் முயற்சியில் மூன்றாம் தரப்பொன்றை ஈடுபடுத்த வேண்டுமென்னும் வாதம் தமிழ் சூழலில் முன்வைக்கப்படுகின்றது.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, அந்த மூன்றாம் தரப்பு இந்தியாவாக இருக்க வேண்டுமென்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றது.
அதே வேளை, புத்திஜீவிகள் சிலரும் இந்தக் கருத்தை வெளிப்படையாக முன்வைத்திருக்கின்றனர்.
இது தொடர்பில் ஈழநாடு ஏற்கவே தெளிவான பார்வையை முன்வைத்திருக்கின்றது.
மூன்றாம் தரப்பென்னும் வாதம் எழுமானால், அது இந்தியாவாகவே இருக்க முடியுமென்னும் பார்வையை நாம் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.
எமது நிலைப்பாட்டை இப்போது பலரும் முன்வைக்கின்றனர்.
மூன்றாம் தரப்பில் ஒரு அடிப்படையான பிரச்னையுண்டு.
அதாவது, மூன்றாம் தரப்பென்பது, பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள இரண்டு தரப்புக்களின் விருப்பத்தினடிப்படையில்தான், இடம்பெற முடியும்.
தமிழர்கள் மட்டும் மூன்றாம் தரப்பின் அவசியம் தொடர்பில் பேசிப் பயனில்லை.
அரசாங்கம் மூன்றாம் தரப்பை நிராகரித்தால், அதன் பின்னர் தமிழர் தரப்பால் எதுவும் செய்ய முடியாது.
வேண்டுமானால், பேச்சுவார்த்தையை தவிர்க்க முடியும்.
ஆனால் ஒரு இறைமையுள்ள நாடென்னும் அடிப்படையில், மூன்றாம்தரப்பின் தலையீட்டை, இலங்கையின் மீது எவரும் நிர்ப்பந்திக்க முடியாது.
இந்த விடயத்தில் வெளியார் தலையீடு செய்வதற்கான வாய்ப்பில்லை.
அரசாங்கமோ, உள்நாட்டு பொறிமுறைகளின் மூலம் தான் தீர்வென்பதை தொடர்ந்தும் அழுத்திவருகின்றது.
இந்த நிலையில் எவ்வாறு மூன்றாம் தரப்பொன்றை ஈடுபடுத்த முடியும்? இதனை சமாளிப்பதற்கான மாற்றுத் தெரிவிருக்கின்றதா? ஒரு தெரிவுண்டு.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கையிலெடுப்பதன் ஊடாக, இந்தியாவை ஒரு மூன்றாம் தரப்பாக இணைக்க முடியும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரே நேரத்தில், இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வின் அடிப்படையாகவும் அதேவேளை, ஒரு மூன்றாம் தரப்பாகவும் தொழிற்படக் கூடியதாகும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா எந்த வேளையிலும், இனப்பிரச்னைக்கான தீர்வில் தலையீடு செய்ய முடியும்.
அதற்கான சட்ட உரித்தை இந்தியா கொண்டிருக்கின்றது.
இந்த அடிப்படையில் விடயங்களை கையாளும் போது, அரசாங்கத்தினால் அதனை ஒரு கட்டத்திற்குமேல் எதிர்க்கவும் முடியாது.
ஆனால் பிறிதொரு (நாடு) மூன்றாம் தரப்பென்றால் அதனை அரசாங்கம் இலகுவாக நிராகரிக்க முடியும்.
தவிர, ஒரு பிராந்திய சக்தியென்னும் வகையில், பிறிதொரு மூன்றாம் தரப்பை இந்தியா பரிந்துரைக்கவும் மாட்டாது.
ஏனெனில் அது இந்தியாவின் இயலாமையை இந்தியா ஒப்புக் கொள்வதாகிவிடும்.
எனவே மூன்றாம் தரப்பென்றால் அது இந்தியாதான்.
இந்தியா இல்லையென்றால் மூன்றாம்தரப்பு சாத்தியமாகாது.
ஒரு வேளை, திம்புவில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது போல், இந்தியாவிற்கு நெருக்கமானதொரு சார்க் நாட்டை இந்தியா விரும்பினால் ஈடுபடுத்த முடியும்.
ஆனால் அதனையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் விரும்பினாலும் தவிர்க்க முடியாத விடயமென்றால், அது இந்தியத் தலையீடு மட்டும்தான்.
காரணம், இந்திய-இலங்கை ஒப்பந்தம் காலம்தோறும், இந்தியாவின் தலையீட்டுக்கான வாய்ப்பை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.
எனவே தற்போதுள்ள சூழலில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கையிலெடுப்பதன் ஊடாக மட்டுமே, ஈழத் தமிழர்கள் மூன்றாம் தரப்பு விவகாரத்தை கையாள முடியும்.