நாடு பொருளாதார நெருக்கடியின் சிவப்பு எச்சரிக்கையை இன்னும் தாண்டவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும்கூட, நம்பிக்கைமிக்க சூழலை ஏற்படுத்துவதில் ரணில் அரசாங்கத்தால் அதிகம் முன்னோக்கி பயணிக்க முடியவில்லை.
இலங்கை பொருளாதார நெருக்கடியின் ஆபத்தான கட்டத்தை இன்னும் தாண்டவில்லையென்று நாணய நிதியத்தின் அறிக்கை கூறுகின்றது.
எனினும், நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவி விரைவில் கிடைக்குமென்னும் எதிர்பார்ப்பு உண்டு – ஆனால், மூன்றாவது கட்ட உதவி கிடைக்க வேண்டுமாயின் – இலங்கை அதற்கு முன்பதாக பல விடயங்களில் முன்னேற்றங்களை காண்பிக்க வேண்டும்.
இவ்வாறானதொரு சூழலில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகவும் இருக்கப் போகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து எவரெல்லாம் களமிறங்கப் போகின்றனர் என்பதில் இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை.
பலமுனைப் போட்டிக்கான சூழலே வெளித்தெரிகின்றது.
ராஜபக்ஷ சகோதரர்களும் ஏதோவொரு வகையில் ஜனாதிபதி தோர்தலில் தலையீடுகளை செய்வர்.
மொட்டு – முற்றிலும் மக்களால் நிராகரிக்கப்படவில்லை என்பதை காண்பிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு.
இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த் தேசிய தலைமைகள் என்போர் நிலைமையை எவ்வாறு கையாளப் போகின்றனர் – என்னும் கேள்விக்கான பதிலை தேடும் பணியை இப்போதே முன்னெடுக்க வேண்டும்.
‘ஈழநாடு’ இது தொடர்பில் முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தியிருக்கின்றது.
சூழ்நிலையை கையாளுவதில்தான், அரசியல் வெற்றி தங்கியிருக்கின்றது என்பதை நமது அரசியல் தலைமைகள் என்போர் புரிந்துகொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் தமிழர்கள் மேலும் பின்னடைவுகளையே சந்திக்க நேரிடும்.
74 வருடங்களுக்கும் மேலான தமிழர் அரசியல் வரலாறு கூறும் அறிவுரை ஒன்றுதான்.
சூழ்நிலையை கையாளாத போது, தொடர்ந்தும் பின்னடைவுகளையே எதிர்கொள்ள நேரிடும்.
பேருந்தை தவறவிட்டுவிட்டு, பின்னால் கையசைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.
தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்டிருப்பது அதுதான்.
சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போதெல்லாம், அதனை தவற விட்டுவிட்டு மற்றவர்களை குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை.
ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்? இந்தக் கேள்வி முக்கியமானது.
ஜனாதிபதி தேர்தலை கையாளுவது தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் கருத்தொருமித்த முடிவுக்கு வரவேண்டும்.
ஒரு தமிழ் பொதுவேட்பாளர் ஆலோசனையை நாம் முன்வைத்திருந்தோம்.
அதனை சாதகமாகப் பரிசீலிக்கும் தீர்மானம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டிருந்தது.
இது தொடர்பில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு தீர்க்கமான தீர்மானத்துக்கு வரவேண்டும்.
நமது பழைய புரிதல்கள் இனிப் பயன்படாது.
அதனை வரலாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்த்தியிருக்கின்றது.
இலங்கை நெருக்கடிக்குள் சிக்குப்பட்டால் அது தமிழர்களுக்கு பயன்படும் – இது ஒரு கணிப்பு.
சீனாவின் பிரசன்னம் அதிகரித்தால், அது தமிழர்களுக்கு பயன்படும் – இது இன்னொரு கணிப்பு.
பொருளாதார நெருக்கடி தமிழர்களுக்கு வாய்ப்பானது, இதனடிப்படையில் ஏதோவொரு வகையில் கொழும்பு இறங்கிவர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் – இது இன்னொரு பார்வை.
ஆனால், இந்தப் பார்வைகள் அனைத்தும் நமது கண்ணுக்கு முன்னாலேயே தோற்றுக்கொண்டிருப்பதை காண்கின்றோம்.
ஏனெனில், தமிழர் பிரச்னையை முன்வைத்து, எவருமே இலங்கையை நோக்கவில்லை.
இதன் காரணமாகத்தான் யுத்தத்துக்கு பின்னரான கடந்த 14 வருடங்களில் தமிழர்களுக்கு சாதகமாக எதுவும் நடைபெறவில்லை.
உண்மையில், பொருளாதார நெருக்கடி தமிழர்களின் சனத்தொகையை மேலும் பலவீனமாக்குவதற்கே பயன்பட்டிருக்கின்றது.
இதனை புரிந்துகொண்டுதான், தமிழர் தலைமைகள் செயலாற்றவேண்டும்.
வெறும் கற்பனை குதிரை சவாரியில் திருப்திகொள்வதை கைவிட வேண்டும்.
சூழ்நிலையை கையாண்டு, எடுக்கக் கூடியதை எடுத்து, அவற்றை உச்சளவில் பயன்படுத்திக்கொண்டு முன்னேறும் வழியை அறிதலே தமிழர்களுக்கான அரசியலாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், முன்னரைப்போன்று, பேருந்தை தவறவிட்டுவிட்டு பின்னால் கையசைத்துக்கொண்டிருக்கும் நிலையே தொடரும்.